ஆட்டிசம் மாற்றுத்திறனாளர் அட்டைப் பதிவு அதிகரிப்பு, சமூகத்தின் விழிப்புணர்வு உயர்ந்துள்ளது

24 ஏப்ரல் 2026, 2:05 AM
ஆட்டிசம் மாற்றுத்திறனாளர் அட்டைப் பதிவு அதிகரிப்பு, சமூகத்தின் விழிப்புணர்வு உயர்ந்துள்ளது

கோலாலம்பூர், ஏப்ரல் 24: 2021-ஆம் ஆண்டில் 23,000 ஆக இருந்த ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கான (OKU) அட்டைப் பதிவு, இந்த ஆண்டு கிட்டத்தட்ட 89,000 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மட் தெரிவித்துள்ளார்.

சுமார் நான்கு மடங்கு ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு, மக்களிடையே விழிப்புணர்வு இப்போது மிகவும் உயர்ந்துள்ளதைக் காட்டுகிறது.
மேலும், பெற்றோர்கள் அதிக அக்கறையுடனும், ஆரம்பத்திலேயே குறைபாட்டைக் கண்டறிவதில் அதிக செயல்திறனுடனும் இருப்பதோடு, நோயறிதலைப் பெறுவதற்கு சமூகம் மேலும் திறந்த மனதுடன் இருப்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது என்று அவர் கூறினார்.

"மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், ஆட்டிசம் ஒரு நோய் அல்ல. இது ஒரு நரம்பியல் வளர்ச்சி சார்ந்த குறைபாடு ஆகும்," என்று ஆட்டிசம் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு தனது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

"இதை நாம் புரிந்துகொள்ளும்போது, அதனுடன் தொடர்புடைய களங்கத்தை நம்மால் அகற்ற முடியும். உண்மையில், இந்தத் தரப்பினருக்கு தனித்துவமான நரம்பியல் பன்முகத்தன்மைத் திறமைகள் உள்ளன. அறிவியல், கலை மற்றும் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் அவர்களால் சிறந்து விளங்க முடியும்," என்றார்.

சுகாதார அமைச்சு (KKM), சுகாதார வெள்ளையறிக்கையின் மூலம், ஆரம்பக்காலத் தலையீடு, சிறந்த தொடர் சிகிச்சைகள் மற்றும் தொழில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் வரை ஆதரவளிப்பது போன்ற தொடர்ச்சியான அம்சங்களை உறுதிசெய்து, வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு அணுகுமுறையைக் கொண்டு வந்துள்ளதாக சுல்கிஃப்லி கூறினார்.

யாரும் விடுபட்டுவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சுகாதார அமைச்சு மற்றும் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு (KPWKM) ஆகியவை சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு மையங்களை (Pusat Pemulihan Dalam Komuniti) தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

"அதே நேரத்தில், உயர்கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், அவர்களுக்கென நியாயமான மற்றும் உள்ளடக்கிய பணிச்சூழலை உருவாக்க முதலாளிகளை ஊக்குவிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.