சிப்பாங்கில் தொழிற்சாலை மூடல்: 304 மலேசியர்கள் வேலை இழப்பு, ஊழியர் நலன் காக்கப்படும் என கெசுமா உத்தரவாதம்

23 ஏப்ரல் 2026, 4:07 AM
சிப்பாங்கில் தொழிற்சாலை மூடல்: 304 மலேசியர்கள் வேலை இழப்பு, ஊழியர் நலன் காக்கப்படும் என கெசுமா உத்தரவாதம்

புத்ராஜெயா: சிப்பாங்கில் உள்ள WRP Asia Pacific Sdn Bhd நிறுவனத்தின் செயல்பாடுகள் மூடப்படுவதை மனிதவள அமைச்சு (கெசுமா), தீபகற்ப மலேசியாவின் தொழிலாளர் துறை (JTKSM) மூலம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இதன்வழி, பாதிக்கப்பட்ட 1,426 ஊழியர்களின் உரிமைகளும் நலனும் பாதுகாக்கப் படுவதை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை அது மேற்கொண்டுள்ளது.

வெளியிட்ட ஓர் அறிக்கையில், சிலாங்கூர், சிப்பாங்கில் உள்ள அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் முழுமையாக நிறுத்தப்பட்டது தொடர்பான புகார்களை அடுத்து, ஏப்ரல் 17-ஆம் தேதி JTKSM மேல்விசாரணை நடத்தியதாக கெசுமா தெரிவித்தது.

"அந்த விசாரணையில், நிறுவனம் கலைப்பாளரை (liquidator) நியமித்துள்ளதும், ஏப்ரல் 15, 2026 முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஊழியர்களுக்கான பணிநீக்க அறிவிப்பை வழங்கியுள்ளதும் உறுதி செய்யப்பட்டது."

"பாதிக்கப்பட்ட 1,426 ஊழியர்களில், 304 பேர் உள்ளூர் ஊழியர்கள், மீதமுள்ள 1,122 பேர் வெளிநாட்டு ஊழியர்கள்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 17-ஆம் தேதி கலைப்பாளர் தரப்பு, சமூகப் பாதுகாப்பு அமைப்பு (பெர்கேசோ) மற்றும் ராயல் மலேசியா போலீஸ் (PDRM) ஆகியவற்றுடன் JTKSM ஒரு கூட்டத்தை நடத்தியதாக கெசுமா தெரிவித்தது.

ஏப்ரல் மாத சம்பளப் பாக்கிகளைத் தீர்க்கவும்

அந்தக் கூட்டத்தின் விளைவாக, கலைப்பாளர் தரப்பு, சம்பளம் மற்றும் பணிநீக்கப் பலன்கள் கோரிக்கை, சம்பள நிலை மற்றும் தற்காலிக ஒப்பந்த வாய்ப்புகள் உள்ளிட்ட பல முக்கிய கடப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.

"சம்பளம் மற்றும் பணிநீக்கப் பலன்கள் தொடர்பான அனைத்து கோரிக்கைகளும், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின் படி கடன் சான்றுப் படிவம் (POD) சமர்ப்பிப்பதன் மூலம் நிர்வகிக்கப்படும்."

"மார்ச் 2026-க்கான சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. ஏப்ரல் 2026-க்கான சம்பளத்தை இறுதி செய்வதற்காக, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட மனிதவளப் பிரிவு, விரிவான ஆவணங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கெசுமாவின் கூற்றுப்படி, ஆவண மேலாண்மை, நிதி விவகாரங்கள் மற்றும் தொழிற்சாலை சொத்துக்கள் மற்றும் இயந்திரங்களின் பராமரிப்பு போன்ற முக்கியப் பணிகளை நிறைவு செய்வதற்கு சில உள்ளூர் ஊழியர்களுக்கு தற்காலிக ஒப்பந்தங்கள் வழங்கப்படும்.

வெளிநாட்டு ஊழியர்களின் நலனைப் பொறுத்தவரை, அவர்களின் தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட நலன்கள், மறு வேலை வாய்ப்பு செயல்முறை முடிவடையும் வரை தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று முதலாளி உத்தரவாதம் அளித்துள்ளார்.

"அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்குப் புதிய முதலாளிகளிடமிருந்து வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று கெசுமா மேலும் கூறியது.

கெசுமா கண்காணிக்கும்

முதலாளியும் கலைப்பாளரும் நாட்டின் தொழிலாளர் சட்ட விதிகளை முழுமையாகப் பின்பற்றுவதை உறுதிசெய்ய, கெசுமா இந்த நிலைமையின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணிக்கும்.

"ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளைக் காக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், இந்த முழு செயல் முறையும் ஒழுங்காகவும், வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யப்படும்."

"ஊழியர்களின் ஆவணங்கள் மற்றும் கோரிக்கைகளைத் தீர்க்கும் செயல்முறை நடந்து கொண்டிருக்கும் வேளையில், பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு ஊகத்தையும் பரப்ப வேண்டாம் என்று கெசுமா அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறது," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

முன்னதாக, மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக, உலகளாவிய எரிசக்தி மற்றும் இரசாயன விநியோகத்தில் ஏற்பட்ட பெரும் இடையூறுகளால், மலேசியாவின் கையுறை தயாரிப்பாளரான WRP Asia Pacific Sdn Bhd, ஏப்ரல் 15 முதல் தனது வர்த்தக நடவடிக்கைகளை மூடுவதாக உள்ளூர் செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது.

மூலப்பொருட்கள் மற்றும் இரசாயனங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், கொள்முதல் காலம் கணிக்க முடியாததாகி விட்டதாகவும், விநியோகஸ்தர்கள் முன்கூட்டியே பணம் செலுத்தக் கோருவதாகவும் அந்த நிறுவனம் கூறியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.