பெட்ரோல், டீசல் விலையில் கணிசமான சரிவு : நிதியமைச்சின் முக்கிய அறிவிப்பு

23 ஏப்ரல் 2026, 1:31 AM
பெட்ரோல், டீசல் விலையில் கணிசமான சரிவு : நிதியமைச்சின் முக்கிய அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 23: தீபகற்ப மலேசியாவில் டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் மாற்றங்களுக்கு ஏற்ப, ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 29 வரையிலான ஒரு வாரக் காலத்திற்குப் புதிய விலைப் பட்டியல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, தீபகற்ப மலேசியாவில் டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு 85 சென் குறைக்கப்பட்டு, RM5.12 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இதன் விலை லிட்டருக்கு RM5.97 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, RON97 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 சென் குறைக்கப்பட்டு RM4.85 ஆகவும், மானியமற்ற RON95 பெட்ரோல் விலை 15 சென் குறைக்கப்பட்டு RM3.87 ஆகவும் மாற்றமடைந்துள்ளது.

நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தானியங்கி விலை நிர்ணய முறையான APM (Automatic Pricing Mechanism) சூத்திரத்தின் அடிப்படையிலேயே இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தின் சராசரி உலகளாவிய சந்தை விலையைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், மேற்கு ஆசியப் பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழலால் பெட்ரோலியப் பொருட்கள் விலை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதையும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், சாமானிய மக்கள் மற்றும் குறிப்பிட்ட பொருளாதாரத் துறையினரைப் பாதுகாக்கும் நோக்கில், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானிய முறையை அரசாங்கம் தொடர்ந்து தற்காத்து வருகிறது.

இதன் அடிப்படையில், மானியம் வழங்கப்பட்ட RON95 (BUDI95) பெட்ரோல் லிட்டருக்கு RM1.99 என்ற விலையிலேயே நீடிக்கிறது. மேலும், சபா, சரவாக் மற்றும் லபுவான் பகுதிகளில் டீசல் விலை லிட்டருக்கு RM2.15 ஆகவும், மானிய விலை டீசல் கட்டுப்பாட்டுத் திட்டங்களின் (SKPS/SKDS) கீழ் உள்ள பயனர்களுக்கு முறையே RM2.05 மற்றும் RM2.15 ஆகவும் விலையில் மாற்றமின்றி தொடர்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், நாட்டின் எரிபொருள் இருப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய மடாணி அரசாங்கம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

எரிசக்தி சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், இதன் மூலம் நாட்டின் விநியோக நிலைத்தன்மைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.


உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.