ஷா ஆலம், ஏப்ரல் 22: கோவிட்-19 பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு, சிலாங்கூர் மக்கள் அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில், மாநில அரசு ஆண்டுதோறும் சுமார் 1,400 'ஏசான் ரஹ்மா' (JER) விற்பனைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டும், அதே வேளையில் உள்ளூர் வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையிலும் இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் முறையாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக விவசாயத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் எஃப்.எம் (Selangor FM) வானொலியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் மாதம்தோறும் தலா இரண்டு விற்பனைத் திட்டங்கள் வீதம், ஒட்டுமொத்தமாக மாதம் 112 திட்டங்கள் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, பண்டிகைக் காலங்களில் நடத்தப்படும் மெகா விற்பனைத் திட்டங்களையும் சேர்த்தால், ஓராண்டில் இந்த எண்ணிக்கை 1,400-ஐ எட்டுவதாக அவர் விளக்கமளித்தார்.
இந்த மலிவு விற்பனைத் திட்டம் இன்னும் கூடுதலாக நடத்தப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அதற்குப் பதிலளித்த டத்தோ இஷாம், இத்திட்டத்தை அளவுக்கு அதிகமாகச் செயல்படுத்துவது சிறு வியாபாரிகள் மற்றும் சில்லறை வர்த்தகர்களைப் பாதிக்கக்கூடும் என்றார்.
மாநில அரசு அனைத்துத் தரப்பினருக்கும் சமநிலையாக இருக்க வேண்டும் என்றும், அடிக்கடி மலிவு விற்பனை நடத்தினால் அது வணிகச் சூழலில் சமமற்ற நிலையை உருவாக்கிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், குறைந்த வருமானம் பெறும் பி40 (B40) பிரிவினர் அதிகம் வாழும் பகுதிகளிலும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலும் இத்திட்டத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.
மேலும், இந்த மலிவு விற்பனைத் திட்டத்தின் பலன் மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைவதை உறுதி செய்ய மாநில சட்டமன்றத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, சூப்பர் மார்க்கெட் வசதிகள் இல்லாத உட்புறக் கிராமங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்யும் வகையில், அதிகப்படியான நடமாடும் லாரிகளைப் (Lorry Bergerak) பயன்படுத்தும் புதிய அணுகுமுறை குறித்து தற்போது தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.





