ஷா ஆலம், ஏப்ரல் 22: சிலாங்கூர் மாநிலத்தின் உணவு விநியோகம் தற்போது சீராகவும் போதுமான அளவிலும் இருப்பதாகவும், விநியோகச் சங்கிலியில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தினசரி கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாநில விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
இன்று சிலாங்கூர் எஃப்.எம் (Selangor FM) வானொலியின் 'தே தாரிக் கோப்பி ஓ' (Teh Tarik Kopi O) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தைப் போலன்றி, தற்போது பொருளாதார மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் இயல்பாக நடப்பதால் உணவு விநியோகத்தில் சிக்கல் இல்லை என்றார்.
எரிபொருள் செலவு அதிகரித்திருந்தாலும், அடுத்த ஒரு மாதத்திலிருந்து இரண்டு மாதங்களுக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு போதுமான அளவில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், மாநிலத்தின் ஏழு மில்லியன் மக்களுக்கான உரம், கால்நடைத் தீவனம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் உறுதி அளித்தார்.
இருப்பினும், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், அதன் தாக்கம் விவசாயத் துறையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதாக டத்தோ இஷாம் எச்சரித்தார். குறிப்பாக, பெட்ரோலியம் சார்ந்த துணைப் பொருட்களான பிட்டுமென் (Bitumen) போன்றவற்றின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இது இரண்டாம் கட்ட விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்றார்.
"பெட்ரோலியம் சார்ந்த துணைப் பொருட்களின் விலை உயர்வு, உரங்களின் விலையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும்," என அவர் கவலை தெரிவித்தார்.
இந்தச் சூழலை எதிர்கொள்ளவும், விவசாயத் துறையில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் மாநில அரசு முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாக அவர் கூறினார்.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த தாக்குதலால், உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையில் (Strait Hormuz) போக்குவரத்து முடங்கியுள்ளது.
இந்த உலகளாவிய எரிசக்தி நெருக்கடி காரணமாக, ஆசியான் நாடுகள் உட்பட பல நாடுகள் எரிபொருள் விலை உயர்வையும் சிக்கன நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.








