வியாபாரிகளுக்கான சுய பாதுகாப்புச் சந்தா திட்டம்: மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது செபராங் பிறை நகராட்சி மன்றம்

22 ஏப்ரல் 2026, 4:17 AM
வியாபாரிகளுக்கான சுய பாதுகாப்புச் சந்தா திட்டம்: மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது செபராங் பிறை நகராட்சி மன்றம்

சுயதொழில் பாதுகாப்பு பங்களிப்பை  சிறு வியாபார பிரிவினரிடம்  கட்டாயமாக்கிய செபராங் பிறை மாநகர் மன்றம்  மலேசிய சாதனைப் புத்தகத்தின் (MBOR) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது  

சிறு வியாபார பிரிவினருக்கு சுயதொழில் பாதுகாப்பு பங்களிப்பைக் கட்டாயமாக்கியதற்காக செபராங் பிறை மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.பி), மலேசிய சாதனைப் புத்தகத்தின் (MBOR) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

நாட்டில் இந்த நடைமுறையை அமல்படுத்திய முதல் உள்ளூராட்சி மன்றம் என்ற பெருமையை எம்.பி.எஸ்.பி பெற்றுள்ளது. இந்த அங்கீகாரம், சமூகப் பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) மற்றும் எம்.பி.எஸ்.பி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப் பட்டதன் மூலம் உறுதிசெய்யப்பட்டது.

சொக்சோ தலைவர் டத்தோஶ்ரீ சுபஹான் கமல் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம், எம்.பி.எஸ்.பி-யின் கீழ் உள்ள ஒவ்வொரு சிறுவியாபாரியும் புதிய வணிக உரிமத்திற்கு விண்ணப்பிக்க அல்லது புதுப்பிக்க ஒரு நிபந்தனையாக இந்தத் திட்டத்தில் பங்களிப்பு செய்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது என்றார்.

"மலேசியாவில் உள்ள அனைத்து சிறுவியாபாரிகள் மற்றும் சிறு வர்த்தகர்களுக்கும் வலுவான மற்றும் நிலையான சமூகப் பாதுகாப்பு வலைப்பின்னல் இருப்பதை உறுதி செய்வதே எங்களின் முக்கிய நோக்கமாகும். இந்தப் பங்களிப்பு அவர்களுக்கான ஒரு முன்னெச்சரிக்கை ஏற்பாடாகும்," என்று அவர் கூறினார்.

"பினாங்கில் மட்டும், 2024 முதல் கடந்த பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், சொக்சோவில் பங்களிப்பாளர்களுக்கு ரிங்கிட் 3.92 மில்லியன் மதிப்பிலான பலன்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன," என்று சுயதொழில் பாதுகாப்புத் திட்ட பங்களிப்பு அமலாக்க புரிந்துணர்வு ஆவணப் பரிமாற்ற நிகழ்வில் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், செபராங் பிறை மேயர் டத்தோ பத்ருல் அமின் அப்துல் ஹமீத் மற்றும் சொக்சோ குழுமத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோஶ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அசிஸ் முகமது ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக்கொண்டனர். பினாங்கு மாநில உள்ளூராட்சி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் குழுத் தலைவர் ஹங் மூய் லை இந்த நிகழ்விற்குச் சாட்சியாக இருந்தார்.

'LINDUNG Kendiri' திட்டத்தின் கீழ் 20 துறைகளைச் சேர்ந்தவர்கள் பலன்களைப் பெறுவதாக சுபஹான் கூறினார். இதில் சிறு வியாபாரி துறைக்கு மட்டும் ரிங்கிட் 479,048 வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி வரை, பினாங்கில் 20 சிறு வியாபாரிகள் ரிங்கிட் 90,734 மதிப்பிலான பலன்களைப் பெற்றுள்ளனர்.

ஏப்ரல் 3 ஆம் தேதி நிலவரப்படி, பினாங்கில் 16,933 சுயதொழில் செய்பவர்கள் (OBS) 'LINDUNG Kendiri' திட்டத்தின் கீழ் தீவிரமாகப் பங்களித்து வருவதாகவும், அவர்களில் 32 சதவீதம் அதாவது 5,422 பேர் சிறு வியாபாரிகள் என்றும் சொக்சோவின் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மனிதவள அமைச்சகம் (KESUMA) மூலம் சொக்சோ, இந்த ஒத்துழைப்பு மாதிரியை நாடு முழுவதும் உள்ள மற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கும் விரிவு படுத்துவதற்கான ஒரு தேசிய முன்மாதிரியாக மாற்றுவதில் உறுதியாக உள்ளது என்று சுபஹான் கூறினார்.

இதற்கிடையில், மேயர் பத்ருல் அமின் கூறுகையில், இந்த சுயதொழில் பாதுகாப்புத் திட்டத்தின் கட்டாய பங்களிப்பு, சிறுவியாபாரிகள் மற்றும் சிறு வர்த்தகர்களின் நலனைப் பாதுகாப்பதில் எம்.பி.எஸ்.பி-யின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்றார். இந்த முயற்சி, எம்.பி.எஸ்.பி-யின் கீழ் உரிமம் பெற்ற 5,641-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளுக்குப் பயனளிக்கும்.

"சமூகப் பாதுகாப்பு என்பது இனி ஒரு தேர்வு அல்ல, அது ஒரு தேவை. இந்தப் பங்களிப்பின் மூலம், சிறு வியாபாரிகள் விபத்து அல்லது வருமான இழப்பு அபாயங்களிலிருந்து பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்களின் குடும்ப நலனுக்கும் இது உத்தரவாதம் அளிக்கிறது," என்றார் அவர்.

பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்திற்கு ஏற்ப, உரிமம் விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தலின் போது பங்களிப்புகளை எளிதாகச் சரிபார்க்க எம்.பி.எஸ்.பி-யின் டிஜிட்டல் அமைப்பு சொக்சோவுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த முயற்சி மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பத்ருல் அமின் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.