அமெரிக்கா, ஏப்ரல் 20 - அமெரிக்காவின் லூசியானா மாகாணம், ஸ்ரீவ்போர்ட் (Shreveport) பகுதியில் நிகழ்ந்த மிகக் கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஒரு வயது முதல் 14 வயது வரையிலான 8 சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குடும்ப வன்முறை காரணமாக நிகழ்ந்த இந்தச் சோகமான சம்பவத்தில், கொலையாளி வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றபோது காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதல் குறித்து ஸ்ரீவ்போர்ட் காவல்துறை ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில், சம்பவ இடத்தில் ஏழு சிறுவர்களின் உடல்கள் வீட்டிற்குள்ளேயே கண்டெடுக்கப்பட்டதாகவும், எட்டாவது சிறுவன் வீட்டின் கூரை வழியாகத் தப்பிக்க முயன்றபோது சுடப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.
முதற்கட்ட விசாரணையின்படி, சந்தேக நபரான ஷாமர் எல்கின்ஸ் (Shamar Elkins), முதலில் ஒரு பெண்ணைச் சுட்ட பிறகு, அங்கிருந்து சில தெருக்கள் தள்ளியிருந்த இந்த வீட்டிற்கு வந்து அங்கிருந்த சிறுவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் மொத்தம் 10 பேர் சுடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், உயிருடன் மீட்கப்பட்டவர்களின் நிலை குறித்துத் தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, கொலையாளி ஒரு வாகனத்தைக் கடத்தித் தப்ப முயன்றார். அப்போது காவல்துறையினர் நடத்திய துரத்தல் வேட்டையில், அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் ஸ்ரீவ்போர்ட் வரலாற்றிலேயே நிகழ்ந்த மிக மோசமான மற்றும் இதயத்தை உலுக்கும் துயரச் சம்பவம் என அந்த நகர மேயர் டோம் ஆர்செனோ (Tom Arceneaux) ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மைக் ஜான்சன் மற்றும் லூசியானா கவர்னர் ஜெஃப் லேண்ட்ரி ஆகியோர் இந்தச் சம்பவத்திற்குத் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தத் துயரம் குடும்ப வன்முறைக்கு எதிரான வளங்களையும் தலையீடுகளையும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக மாநிலச் செனட்டர் சாம் ஜென்கின்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
'துப்பாக்கி வன்முறை ஆவணக்' (Gun Violence Archive) குறிப்புகளின்படி, இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரை அமெரிக்காவில் குறைந்தது 119 பெரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதும், அதில் 79 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.








