ஷா ஆலம், ஏப்ரல் 12: ஊழியர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில், வேலை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையிலான சமநிலையை (Work-life balance) மேம்படுத்தச் சிலாங்கூர் மாநில அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக, குடும்பநலன் சார்ந்த கொள்கைகள் மூலம் ஊழியர்களின் பணிச் சூழலை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படுவதாகப் பெண்கள் மேம்பாடு மற்றும் நலத்துறைக்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்துள்ளார்.
சுல்தான் சலாஹுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் உள்ள தமது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாநில அரசின் கொள்கைகள், நெகிழ்வான வேலை நேர முறைகள் மற்றும் குடும்பப் பராமரிப்பு விடுமுறை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார்.
இத்தகைய மாற்றங்கள் ஊழியர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதோடு, தனியார் நிறுவனங்களில் ஆரோக்கியமான பணிச் சூழலை உருவாக்கி, ஒட்டுமொத்த நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தும் என்று அவர் விளக்கமளித்தார்.
ஆஸ்திரேலியாவின் 'பேரண்ட்ஸ் அட் வொர்க்' (Parents At Work) மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இந்த அணுகுமுறை உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அன்ஃபால் சாரி, இது பெண்களுக்கானது மட்டுமல்லாமல், பராமரிப்புப் பொறுப்புகளைக் கொண்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றார்.
குடும்பநலக் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனங்கள், சமூக உள்ளடக்கிய தன்மையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சிறந்த உற்பத்தித் திறனையும் பெறுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், 'வனிதா பெர்டாயா சிலாங்கூர்' (WBS) அமைப்பு 2025 முதல் அரசாங்கச் சார்பு நிறுவனங்களுடன் (GLC) நடத்திய கலந்துரையாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
ஒவ்வொரு தனிநபரும் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்தில் பராமரிப்புப் பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும் என்ற எதார்த்தத்தை உணர்ந்து, முதலாளிகள் தங்கள் ஊழியர்களிடம் அதிகப் புரிந்துணர்வுடனும் அனுதாபத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை மாநில அரசு வலியுறுத்தி வருகிறது.
மேலும், மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்துடன் (UIAM) இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் பாலியில் நடைபெறவுள்ள மாநாடு ஒன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார். இது சிலாங்கூர் மாநில அரசின் அணுகுமுறை சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளதைக் காட்டுகிறது.
ஏற்கனவே சிலாங்கூர் மாநில மந்திரி புசார் கார்ப்பரேஷன் (MBI) நிறுவனத்தில் அமல்படுத்தப்பட்ட 'வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை' பெண் ஊழியர்களிடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், பணிபுரியும் தாய்மார்கள் தங்கள் தொழில் மற்றும் குடும்பப் பொறுப்புகளைச் சீராகக் கையாள இத்தகைய கொள்கைகள் தொடர்ந்து ஒருங்கிணைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.








