ஷா ஆலம்: சுங்கை பெசார், ஜாலான் சுங்கை பாஞ்சாங், பெலியா 2-இல் நேற்று நிகழ்ந்த மரண விபத்தைக் கண்டவர்கள் அல்லது அது குறித்து தகவல் தெரிந்தவர்கள் போலீஸ் விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
சபாக் பெர்ணம் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் எம்.டி யூசோப் அஹ்மட் கூறுகையில், நேற்று மதியம் சுமார் 1.15 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவித்தார். சுங்கை பாஞ்சாங்கிலிருந்து உலு சிலாங்கூர், ஃபெல்டா கெடாங்சா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பயணித்த புரோட்டோன் இஸ்வாரா கார் இந்த விபத்தில் சிக்கியது.
அடையாளம் காணப்படாத ஒரு டிரெய்லருடன் அந்த கார் உரசியதாக நம்பப்படுகிறது. அதன் பதிவு எண் மற்றும் வகை இன்னும் கண்டறியப்படவில்லை என பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
"அந்த உராய்வின் விளைவாக, புரோட்டோன் இஸ்வாரா கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடதுபுறம் விலகி, தடுப்புக் கம்பியில் மோதி கவிழ்ந்தது," என்று அவர் கூறினார்.
காரின் ஓட்டுநரான 48 வயது ஆடவர், வாகனத்தில் சிக்கிக்கொண்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. முன் இருக்கையில் இருந்த அவரது 36 வயது மனைவிக்குத் தோள்பட்டை மற்றும் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதே நேரத்தில், அவர்களது இரண்டு வயது மகள் முகத்தில் சிறு காயங்களுக்கு உள்ளானார்.
"பாதிக்கப்பட்ட இருவரும் மேலதிக சிகிச்சைக்காக சபாக் பெர்ணம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்," என்று எம்.டி யூசோப் மேலும் கூறினார்.
சம்பந்தப்பட்ட டிரெய்லர் ஓட்டுநரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த வழக்கு 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
"விபத்து குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமட் ஷைபுடின் முகமட் நோரை 017-6645812 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.
டிரெய்லருடன் கார் உரசிய விபத்தில் ஆடவர் பலி: தகவல் தெரிந்தவர்களை சாட்சிக்கு உதவ போலீஸ் அழைக்கிறது
2 ஏப்ரல் 2026, 4:31 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மத்திய கிழக்கு நெருக்கடியால் மாநில அரசின் சிக்கன நடவடிக்கைகளில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலம் புறக்கணிக்கப்பட மாட்டாது.
Pakiya, Siti Rohaizah Zainal
5 ஏப்ரல் 2026

selangor
சபாக் பெர்ணம்: சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 74% அதிகரிப்பு
Shalini Rajamogun
13 மார்ச் 2026

selangor
சபாக் பெர்ணம் ஓட்டப் பந்தயங்களுக்கு RM3 கட்டணம்: மாவட்ட மன்றம் விளக்கம்
Mavitthran
10 மார்ச் 2026

selangor
சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டுவதை கட்டுப்படுத்த சபாக் பெர்ணம் நகராண்மை கழகம் கடும் முயற்சி
Shalini Rajamogun
30 ஜனவரி 2026

உங்கள் கருத்து என்ன?




