ஷா ஆலம், ஏப்ரல் 2: உபகரணங்களைத் தூய்மைப்படுத்தும் பணியில் பன்றி முடிகளால் ஆன தூரிகையைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மலாக்காவில் உள்ள ஒரு காப்பி மற்றும் பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலையின் ஹலால் சான்றிதழ் திரும்பப் பெறப் பட்டது.
கடந்த ஜனவரி மாதம் மலாக்கா இஸ்லாமிய சமயத் துறையின் (JAIM) ஹலால் நிர்வாகப் பிரிவு நடத்திய சோதனையின்போது, அந்த வளாகத்தில் விலங்குகளின் முடிகளால் செய்யப்பட்ட தூரிகை பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.
அந்தத் தூரிகை பறிமுதல் செய்யப்பட்டு, உறுதிப்படுத்தலுக்காக நீலாய், பண்டார் என்ஸ்டெக்கில் உள்ள மலேசிய ஹலால் பகுப்பாய்வு மையத்திற்கு (MyHAC) அனுப்பப் பட்டது. மார்ச் மாதம் பெறப்பட்ட பகுப்பாய்வின் முடிவுகள், அந்தத் தூரிகை பன்றி முடியின் இயற்பியல் பண்புகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்ததாக JAIM இயக்குநர் டத்தோ எம்.டி அஷான் சமட் கூறினார்.
"இதைத் தொடர்ந்து, தொழிற்சாலைக்குச் சொந்தமான மலேசிய ஹலால் சான்றிதழ் (SPHM) உடனடியாகத் திரும்பப் பெறப் பட்டது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தத் தொழிற்சாலை, இதற்கு முன்னர் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையிடமிருந்து (JAKIM) செல்லுபடியாகும் ஹலால் சான்றிதழைப் பெற்றிருந்தது," என்று BH செய்தி வெளியிட்டுள்ளது.
ஹலால் சான்றிதழ் வைத்திருக்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும் அறியாமை ஒரு காரணமாக இருக்க முடியாது என்று அவர் கூறினார்.ஹலால் சான்றிதழ் வைத்திருப்பவர்கள், செயல் பாடுகளில் எந்தவிதமான சமரசமும் இன்றி நிர்ணயிக்கப்பட்ட தரங்களுக்கு முழுமையாகக் கட்டுப்பட வேண்டும்.
"சந்தையில் உள்ள பொருட்களின் ஹலால் நிலையின் மீது நுகர்வோர் நம்பிக்கையை உறுதி செய்வதற்காக, ஹலால் சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் மீதான கண்காணிப்பை JAIM தொடர்ந்து தீவிரப்படுத்தும்," என்று அவர் மேலும் கூறினார்.





