20 ஆண்டுகளுக்குப் பிறகு அவசரமாக சாயம் பூச வேண்டிய நிலையில் அம்பாங்கில் இரண்டு அடுக்குமாடி வீடுகள்

22 மார்ச் 2026, 10:26 AM
20 ஆண்டுகளுக்குப் பிறகு அவசரமாக சாயம் பூச வேண்டிய நிலையில் அம்பாங்கில்  இரண்டு அடுக்குமாடி வீடுகள்

ஷா ஆலம், மார்ச் 22: 20 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப் படாததால், அம்பாங் பகுதியில் உள்ள இரண்டு குறைந்த விலையிலான தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் அவசரமாக சாயம் பூசப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக தெரத்தாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் யூ ஜியா ஹௌர் தெரிவித்தார்.

இந்த கட்டிடங்கள் பாண்டான் பெர்டானா அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புக்கிட் செகார் பிளாக் A3 ஆகியவை ஆகும். இவை 1990களில் கட்டப்பட்டவை என்று அவர் கூறினார்.

“சிலாங்கூர் பிஞ்ஞாயாங் திட்ட நிதியின் கீழ் பரிசீலனைக்காக தேவையான ஆவணங்களை மாநில அரசிற்கு நான் சமர்ப்பித்துள்ளேன்,” என்று, பாண்டான் பெர்டானா குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு விளக்கமளிக்கும் போது சட்டமன்ற உறுப்பினர் கூறியதாக The Star செய்தித்தாளின் தகவலின்படி தெரிவித்தார்.

மேலும், பராமரிப்பு கட்டணங்கள் முறையாக வசூலிக்கப் படாததால், இந்த இரு குடியிருப்புகளும் நீண்ட காலமாக பராமரிப்பு சிக்கல்களை சந்தித்து வருவதாக யூ தெரிவித்தார்.

“இதன் விளைவாக, மேலாண்மை அமைப்புகள் தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளன.

“மேலும், கூரை ஒழுகுதல் மற்றும் சாலைகளின் மோசமானநிலை போன்ற பிற பிரச்சினைகளும் உள்ளதாக எனக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது. இவை வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ் சரிசெய்யப்பட வேண்டும்,” என்றார்.

பாண்டான் பெர்டானா ருக்குன் தெத்தாங்கா தலைவர் ரௌசி சாண்டி, சாயம் பூசும் விண்ணப்பம் ஒப்புதல் பெறும் என குடியிருப்போர் நம்பிக்கை வெளியிட்டதாக கூறினார்.

“இந்த ஐந்து மாடி அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மாதாந்திர பராமரிப்பு கட்டணம் வெறும் RM22 மட்டுமே. இருந்தாலும் பலர் அதை செலுத்தவில்லை.

“வாடகையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு இடையே கட்டணம் யார் செலுத்த வேண்டும் என்ற விவகாரத்தில் முரண்பாடுகள் உள்ளதால், கட்டணம் செலுத்தப் படாமல் போகிறது,” என்றார்.

ரௌசி மேலும், நிதி பற்றாக்குறை காரணமாக மேலாண்மை அமைப்பின் பராமரிப்பு பணிகள் பாதிக்கப் பட்டுள்ளதாக கூறினார்.

“பலத்த காற்றால் கூரைகள் சேதமடைந்த சம்பவங்களிலும், மேல்மாடியில் வசிப்பவர்கள் தங்களது சொந்த செலவில் பழுது பார்த்துள்ளனர்,” என்றார்.

பாண்டான் பெர்டானா அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 300 வீடுகள் உள்ள இரண்டு கட்டிடங்கள் உள்ளன.

இந்த வருகையின் போது அம்பாங் ஜெயா மாநகராட்சி (MPAJ) கவுன்சிலர் ஸ்டெல்லா லியோங் சின் யின் அவர்களும் கலந்து கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.