கோலாலம்பூர், செப். 11 - ஸ்தாப்பாக், டானாவ் கோத்தாவிலுள்ள உள்ள 19 மாடி மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பில் மலேசிய குடிநுழைவுத் துறை இன்று அதிகாலை நடத்திய சோதனையில் 125 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 16 முதல் 70 வயதுக்குட்பட்ட 81 ஆண்களும் 44 பெண்களும் அடங்குவர் என்று கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் வான் முகமது சௌபி வான் யூசோஃப் கூறினார்.
கைதானவர்களில் மியான்மர் (69), இந்தியா (25), பாகிஸ்தான் (14), இந்தோனேசியா (12) மற்றும் வங்காளதேசம் (5) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர் என்று அவர் சொன்னார்.
அந்த குடியிருப்புப் பகுதியில் சட்டவிரோத குடியேறிகள் என நம்பப்படும் வெளிநாட்டினரின் ஆதிக்கம் குறித்து உள்ளூர் சமூகத்தினரிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரண்டு வார உளவுத்துறை நடவடிக்கையின் வாயிலாக 380 குடியிருப்புகளைக் கொண்ட ஒரு தொகுதியை அடையாளம் காணப்பட்டது. மேலும் 400 பேர் சம்பந்தப்பட்ட 64 குடியிருப்புகளில் இலக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் நடவடிக்கைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாதது அல்லது நிர்ணயிக்கப்பட்ட தேதியை விட அதிக காலம் தங்கியிருந்தது போன்ற குறாறங்களை புரிந்தது சோதனையில் கண்டறியப்பட்டதாக கூறிய அவர், 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 6(1)(சி) பிரிவு மற்றும் 15(4) பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
குடியிருப்புப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் அந்நிய நாட்டினர் மற்றும் அங்கு காணப்படும்
போதை மற்றும் குடிப்பழக்கம் அப்பகுதியில் வசிப்பவர்கள் மத்தியில் அசெளரியத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.
வெளிநாட்டினருக்கு வீடுகளை வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளர்கள், உள்ளூர்வாசிகளின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வான் முகமது சௌபி வலியுறுத்தினார்.
சட்டவிரோதமாகக் குடியேறியவர்களில் பெரும்பாலோர் மாதத்திற்கு 700 வெள்ளி முதல் 1,200 வெள்ளி வரை வீடுகளை வாடகைக்கு எடுப்பதாகவும், குடியிருப்பின் நிலையைப் பொறுத்து அறை வாடகையின் வாடகை 200 முதல் 400 வெள்ளி வரை நிர்ணயிக்கப்படுவது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
டானாவ் கோத்தா குடியிருப்பில் குடிநுழைவுத் துறை சோதனை- 125 பேர் கைது
11 செப்டெம்பர் 2025, 10:08 AM