கோலாலம்பூர், செப். 11 - பள்ளி விடுமுறை மற்றும் மலேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இம்மாதம் 12, 13, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பிளஸ் மலேசியா பெர்ஹாட் (பிளஸ்) நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தினசரி 22 லட்சம் வாகனங்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது.
பிளஸ் நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 2ஐ (எல்.பி.டி.2) பயன்படுத்தும் வாகனமோட்டிகள் பிளஸ் பயன்பாட்டில் உள்ள MyPLUS-TTA டிஜிட்டல் பயண அட்டவணையைப் பார்த்து தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு பிளஸ் நிறுவனம் இன்று ஒரு அறிக்கையில் அறிவுறுத்தியது.
அண்மையில் மேம்படுத்தப்பட்டதன் மூலம் MyPLUS-TTA- செயலியை இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச நாட்களில் அணுகலாம்.
பண்டிகைக் காலத்திற்கு அப்பால் உச்ச நாட்களில் பிளஸ் மற்றும் எல்.பி.டி.2 நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவோர் தங்கள் பயணங்களை மிகவும் திறமையாகத் திட்டமிட உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமின்றி சீரான போக்குவரத்தை உறுதிசெய்து மிகவும் வசதியான பயண அனுபவத்தை வழங்குகிறது என்று பிளஸ் நிறுவனம் தெரிவித்தது.
நெடுஞ்சாலை பயன்படுத்துவோர் தங்கள் பயணத்தை எளிதாக திட்டமிடும் வகையில் செயலியை பதிவிறக்கம் செய்ய அல்லது புதுப்பிக்க பிளஸ் நிறுவனம் அறிவுறுத்துகிறது.
அத்துடன் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு டச் அண்ட் கோ அட்டை அல்லது மின்-வாலட் இருப்பு எப்போதும் போதுமானதாக இருப்பதை உறுதிசெய்யும்படியும் வாகனமோட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.