கிள்ளான், செப். 10 - கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூலை வரை 61,300 தொழில்முனைவோருக்கு மொத்தம் 88 கோடியே 20 லட்சம் வெள்ளியை வர்த்தக கடனுதவியாக ஹிஜ்ரா சிலாங்கூர் அறக்கட்டளை வழங்கியுள்ளது.
ஐ-பிசினஸ் மற்றும் நியாகா டாருல் ஏஹ்சான் (நாடி) திட்டத்தின் கீழ் 92,600 பரிவர்த்தனைகள் இந்த கடனுதவியின் வழி மேற்கொள்ளப்பட்டதாக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆடசிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் நாடி திட்டத்தின் வாயிலாக மட்டும் 40 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 550 கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் வழி வழங்கப்பட்ட கடன் முழுவதும் திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது என்றார் அவர்.
8.88 விழுக்காடு சிறப்பு வட்டி விகித சலுகையுடன் ஹிஜ்ரா சிலாங்கூர் எடுத்த இந்த அணுகுமுறை, வணிக விரிவாக்கத்திற்கு உதவி தேவைப்படும் தொழில்முனைவோரை ஈர்ப்பதற்கான ஒரு புதிய முயற்சியாகும் என நேற்று இங்கு செலபெர் 8.88% நாடி மெர்டேக்கா பிரச்சாரத்தைத் தொடங்கிய பிறகு அவர் கூறினார்.
தொழில்முனைவோருக்கு சுமையாக இல்லாத வகையில் குறைந்தபட்ச அளவில் வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதற்கான சிறந்த வழிமுறையை ஹிஜ்ரா சிலாங்கூர் ஆராய்ந்து வருவதாக நஜ்வான் தெரிவித்தார்.
ஹிஜ்ரா சிலாங்கூர் மாநில அரசிடமிருந்து நிதியைப் பெறாததால் நடவடிக்கை மற்றும் நிர்வாகச் செலவுகளை ஈடுகட்ட இந்த வட்டி விகித முறை அமல்படுத்தப்படுகிறது என்பது பலர் புரிந்து கொள்ளவில்லை.
வட்டி விகிதங்கள் தன்னிச்சையாக விதிக்கப்படுவதில்லை. மேலும், சேகரிக்கப்பட்ட நிதி தேவைப்படும் பிற தொழில்முனைவோருக்கு விநியோகிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.