ad

ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி உள்ளடக்கங்களை அகற்றுவதற்கான உத்தரவை பல சமூக ஊடகங்கள் பின்பற்றவில்லை

10 செப்டெம்பர் 2025, 4:44 AM
ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி உள்ளடக்கங்களை அகற்றுவதற்கான உத்தரவை பல சமூக ஊடகங்கள் பின்பற்றவில்லை

கோலாலம்பூர், செப் 10 - செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மூலம் உருவாக்கப்பட்ட, போலி உள்ளடக்கங்களை அகற்றுவதற்கான உத்தரவை, பல சமூக ஊடக வழிநடத்துனர்கள் முழுமையாகப் பின்பற்றவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜனவரி முதலாம் தேதியிலிருந்து இவ்வாண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை, AI அடிப்படையிலான போலி உள்ளடக்கங்களை அகற்றும் பொருட்டு, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) 1,602 விண்ணப்பங்களை வெளியிட்டது.

எனினும், அந்த எண்ணிக்கையில் 1,346 உள்ளடக்கங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் விவரித்தார்.

AI-ஐ உட்படுத்திய உள்ளடக்கங்கள் தொடர்பிலான இணைய பாதுகாப்பு சிக்கல்களை, சமூக ஊடகங்கள் பெரிதாகக் கருதுவதில்லை என்று எம்.சி.எம்.சி கூறுவதாக டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார்.

"மாட்சிமை தங்கிய மாமன்னர் மற்றும் பிரதமரே ஏ.ஐ அம்சங்களுடன் உருவான போலி உள்ளடக்கங்களுக்கு ஆளாகியதை நாம் கண்டோம். மாட்சிமை தங்கிய மாமன்னர் முதலீட்டுப் பங்குகளை விற்பனை செய்வது போன்ற உள்ளடக்கம் உருவாகியது. அது சாத்தியமற்றது. நடக்காத ஒன்று," என்றார் அவர்.

சட்டத்தை அமல்படுத்துவதற்கான தேவையைக் கருத்தில் கொண்டு, இவ்வாண்டு இறுதி அல்லது 2026-ஆம் ஆண்டு தொடக்கத்திற்குள், 2025-ஆம் ஆண்டு இணையப் பாதுகாப்புச் சட்டத்தை (சட்டம் 866) அரசாங்கம் அமலுக்குக் கொண்டுவரும் என்று அவர் தெரிவித்தார்.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.