டோஹா, செப். 10 - கட்டாரில் உள்ள ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேல் நேற்று துணிகரத் தாக்குதலைத் தொடங்கியது. இதன்வழி அந்நாடு மத்திய கிழக்கு முழுவதும் தனது இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது.
காஸாவில் சுமார் இரண்டு வருடங்களாக நிகழ்ந்து வரும் போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எகிப்துடன் இணைந்து மத்தியஸ்தராக செயல்பட்ட கட்டார், இந்த தாக்குதலை "கோழைத்தனமானது" என வர்ணித்ததோடு இது அப்பட்டமான அனைத்துலக விதிமீறல் என்றும் கூறியது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தை குழுவில் இருந்த ஹமாஸ் அதிகாரிகள் இத்தாக்குதலில் இருந்து தப்பியதாக ஹமாஸ் வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.
இந்த தாக்குதல் ஹமாஸின் உயர்மட்ட தலைவர்களை இலக்காகக் கொண்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.
அவர்களில் நாடு கடந்து வாழும் காஸா தலைவரும் உயர்மட்ட பேச்சு வார்த்தையாளருமான கலீஸ் அல்-ஹயாவும் அடங்குவார்.
கத்தாரின் டோஹாவில் பல குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். நகரின் லெக்டிஃபியா பெட்ரோல் நிலையத்திலிருந்து கரும் புகை மூட்டங்கள் கிளம்பின.
பெட்ரோல் நிலையத்திற்கு அடுத்ததாக ஒரு சிறிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இது காஸா மோதல் தொடங்கியதிலிருந்து 24 மணி நேரமும் கட்டாரின் எமிரி பாதுகாவலர்களால் பாதுகாக்கப்படுகிறது.
தாக்குதல் நடந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு குண்டுவெடிப்பு நடந்த இடத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் ஆம்புலன்ஸ்கள், குறைந்தது 15 போலீஸ் மற்றும் அடையாளம் தெரியாத அரசு கார்கள் குவிந்தன.
பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் இஸ்ரேலைத் தாக்கி 1,200 பேரைக் கொன்று 251 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்ததற்கு பழிவாங்கும் விதமாக இஸ்ரேல் பல உயர்மட்ட ஹமாஸ் தலைவர்களைக் கொன்றுள்ளது.
காஸா மோதலின் தொடர்ச்சியாக அது லெபனான், சிரியா, ஈரான், ஏமன் ஆகிய நாடுகளிலும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பிற இராணுவ நடவடிக்கைகளை அது தொடங்கியுள்ளது.