கோத்தா பாரு, செப். 9 - இங்குள்ள கம்போங் பாலோ, ஜாலான் கம்போங் சிரே, பிந்து கேங்கில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சனிக்கிழமை அதிகாலை சோதனை நடத்திய போலீசார் உள்நாட்டு நபரைக் கைது செய்ததோடு அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 36 தோட்டாக்களைக் கைப்பற்றினர்.
அதிகாலை 5.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் கிளந்தான் சிறப்பு விசாரணைப் பிரிவு (டி9)
மற்றும் குற்றப் புலனாய்வுத் பிரிவு (டி4) பங்கு கொண்டதாக
கிளந்தான் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமாட் கூறினார்.
கைதான 50 வயது சந்தேக நபருக்கு மூன்று முந்தைய குற்றப் பதிவுகளும் போதைப்பொருள் தொடர்பான ஒன்பது பதிவுகளும் இருப்பதாக அவர் கூறினார்.
மேலும் இச்சோதனையில் ஒரு க்ளோக் 26 ஜெனரல் 4 ஆஸ்திரிய 9x9 கைத்துப்பாக்கி மற்றும் 36 பயன்படுத்தப்படாத தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர்
மெத்தம்பெத்தமைன் போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவ்வாடவர் விசாரணைக்காக செப்டம்பர் 10 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என முகமது யூசோப் கூறினார்.
இந்த வழக்கு 1971ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின்
(கடுமையான தண்டனைகள்) பிரிவு 8, 1960ஆம் ஆண்டு
ஆயுதச் சட்டத்தின் பிரிவு 8(ஏ) மற்றும் 1952ஆம் ஆண்டு அபாயகர
போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 15(1)(ஏ) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
போலீஸ் சோதனையில் ஆடவர் கைது - துப்பாக்கி, 36 தோட்டாக்கள் பறிமுதல்
9 செப்டெம்பர் 2025, 8:11 AM