கோலாலம்பூர், செப். 9 - கடந்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் 215,000 வெள்ளி சம்பந்தப்பட்ட நான்கு முதலீட்டு மோசடி சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் யூனிட் டிரஸ்ட் ஆலோசகர் மீது இரண்டு செஷன்ஸ் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதிகள் அஸ்ருல் டாருஸ் மற்றும் நோர்மா இஸ்மாயில் ஆகியோர் முன் தனித்தனியாக வாசிக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் 58 வயதான அம்ரான் முகமது அமீன் மறுத்து விசாரணை கோரினார்.
நீதிபதி அஸ்ருல் முன் நடைபெற்ற வழக்கில் கெனாங்கா இன்வெஸ்டர்ஸ் பெர்ஹாட்டின் கீழ் உள்ள ஒரு யூனிட் டிரஸ்ட் திட்டத்தில் முதலீடு செய்ய வைத்ததன் மூலம் இரு நபர்களை ஏமாற்றியதாக அம்ரான் குற்றம் சாட்டப்பட்டது.
பாதிக்கப்பட்ட இருவரும் 130,000 மற்றும் 65,000 வெள்ளிக்கான காசோலைகளை வழங்கினர். அவற்றை அவர் தனது சொந்த நலனுக்காக யூனிட் டிரஸ்ட் பங்குகளை வாங்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2021 ஜூலை 20 மற்றும் 2022 பிப்ரவரி 14க்கு இடையே ஜாலான் துன் ரசாக், கெனாங்கா இன்வெஸ்டர்ஸ் பெர்ஹாட் டவரில் இக்குற்றங்களை புரிந்ததாகக் கூறப்படுகிறது.
அம்ரான் மீது 2007 ஆம் ஆண்டு மூலதன சந்தை மற்றும் சேவை சட்டத்தின் 179(பி) துணைப்பிரிவின்
கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 10 லட்சம் வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
இதனிடையே, இரண்டு நபர்களை ஏமாற்றி தலா 10,000 வெள்ளி மதிப்புள்ள காசோலைகளை பெற்றதாக
அம்ரான் மற்றும் அவரது முன்னாள் மனைவி நதிஹா நவி ஆகியோர் மீது மற்றொரு நீதிமன்றத்தில்
நீதிபதி நோர்மா முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிதி அவரது சொந்த கணக்கின் கீழ் யூனிட் டிரஸ்ட் பங்குகள் வாங்க பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றங்கள் 2022 ஜனவரி 20 முதல் ஜூன் 27 அதே ஒரே இடத்தில் புரியப்பட்டதாகக் குற்றப் பத்திரிகையில் கூறப்படுகிறது.
வெ.215,000 மோசடி- முன்னாள் யூனிட் டிரஸ்ட் ஆலோசகர் மீது குற்றச்சாட்டு
9 செப்டெம்பர் 2025, 2:25 AM