கோலாலம்பூர், செப் 8 — கோவிட்-19 காலத்தில், நான்கு பணம் எடுக்கும் திட்டங்கள் மூலம் RM145 பில்லியன் ஊழியர் சேம நிதி வாரியப் பங்களிப்பாளர்களால் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பங்களிப்பாளர்களின் சேமிப்பை மீண்டும் கட்டியெழுப்ப ஊழியர் சேம நிதி வாரியம் (EPF) செயல்பட்டு வருவதாக நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
i-Lestari, i-Sinar, i-Citra மற்றும் சிறப்பு பணம் எடுக்கும் வசதிகள் மூலம் 8.2 மில்லியன் பங்களிப்பாளர்கள் பணத்தை எடுத்துள்ளனர் என அவர் கூறினார்.
“ஓய்வூதிய சேமிப்புகளை வலுப்படுத்துவதிலும், உறுப்பினர்கள் நிலையான ஓய்வூதிய வருமானத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதிலும் இப்போது கவனம் செலுத்தப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
பங்களிப்பாளர்கள் தங்கள் ஓய்வூதிய வயதை பூர்த்தி செய்ய போதுமான சேமிப்பு உள்ளதா என்பதை அறிய விரும்பிய செனட்டர் முகமது ஹஸ்பி மூடாவின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி பதில் அமர்வின் போது அமீர் ஹம்சா இவ்வாறு கூறினார்.
கணக்கு 1, கணக்கு 2 மற்றும் கணக்கு 3 ஆகியவற்றின் மூலம் ஊழியர் சேம நிதி புதுப்பிக்கப்பட்டுள்ளதால், அரசாங்கம் பணம் எடுக்கும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்த விரும்பவில்லை என்றும் அமைச்சர் கூறினார். அவற்றில் கணக்கு 3 அவசரகாகத்தில் பணத்தை எடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய உறுப்பினர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் EPF பரிசீலித்து வருவதாகவும், இது அடுத்த சில ஆண்டுகளில் அங்கீகரிக்கப்படும் என்றும், ஏற்கனவே உள்ள பங்களிப்பாளர்கள் இந்தத் திட்டத்திற்கு மாறலாம் என்றும் அவர் கூறினார்.