பாலிங், செப் 8: ரஹ்மா (சாரா) உதவி திட்டத்தின் செயல்பாடு தற்போது நன்றாகவும் சீராகவும் நடைபெற்று வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
திட்டம் ஆரம்பித்தபோது சிக்கல்கள் ஏற்பட்டாலும் அவை விரைவில் சரிசெய்யப் பட்டதாக அவர் கூறினார்.
"இதுவரை நான் பார்த்ததில் வாங்குதல்கள் நன்றாக நடப்பதாகத் தெரிகிறது. முதல் இரண்டு நாட்களில் தற்காலிக இடையூறு இருந்தது. ஆனால் இப்போது சீராகவே நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.
மேலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து நான்கு, ஐந்து நாட்கள் ஆகின்றன, தற்போது ஒரு புகாரும் வரவில்லை," என்றும் அவர் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த Program Outreach SARA 2025-ஐ பார்வையிட்ட போது தெரிவித்தார்.
சாரா அமைப்பின் முன்னேற்றம் குறித்து, நிதி அமைச்சராகவும் இருக்கும் பிரதமர் அன்வார், வருகின்ற அக்டோபரில் 2026 பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது உதவி அமைப்பு தொடர்பான புதிய முயற்சிகள் மற்றும் கொள்கைகள் அறிவிக்கப்படும் என்றார்.
மேலும், சாரா RM100 உதவி பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் உள்ள கடைகள் மற்றும் சிறிய சந்தைகளிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
2025 தேசிய தினத்துடன் இணைந்து அறிவிக்கப்பட்ட சாரா பாராட்டு உதவி, 22 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் மற்றும் RM2 பில்லியன் கூடுதல் நிதியை உள்ளடக்கியது. இது இந்த ஆண்டு எஸ். டி. ஆர் மற்றும் சாராவுக்கு மொத்த ஒதுக்கீட்டை RM15 பில்லியனாகக் கொண்டுவருகிறது- இது நாட்டின் பண உதவி வரலாற்றில் மிக உயர்ந்ததாகும்