பத்து பஹாட், செப். 8 - முகநூலில் வெளியிடப்பட்ட இல்லாத முதலீட்டுத் திட்ட மோசடியில் சிக்கிய ஒரு பெண் வர்த்தகர் ஒருவர் 571,242 வெள்ளியை இழந்தார்.
கடந்தாண்டு மார்ச் 16ஆம் தேதி விளம்பரப்படுத்தப்பட்ட அதிக லாபம் தரும் முதலீட்டுத் திட்டத்தினால் ஈர்க்கப்பட்ட 55 வயதான பாதிக்கப்பட்ட அப்பெண் வாட்ஸ்அப் செயலி மூலம் அடையாளம் தெரியாத சந்தேக நபரைத் தொடர்பு கொண்டதாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருலானுவார் முஷாடாட் அப்துல்லா சானி தெரிவித்தார்.
பின்னர் அவர் ஜூலை 10 முதல் 31 வரை மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 571,242 வெள்ளி மதிப்புள்ள பல பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார். பிறகு அவர், தனது முதலீட்டு செயலியில் 804,000 வெள்ளி லாபம் பதிவாகியுள்ளதைக் கண்டார்.
எனினும், பணத்தை மீட்க முயன்றபோது அந்த கணக்கு முடக்கப்பட்டது தெரியவந்தது. வாக்குறுதியளித்தபடி எந்த பணமும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அம்மாது இறுதியாக உணர்ந்தார் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மோசடி குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் 420வது பிரிவின் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
பொதுமக்கள் லாபகரமான வருமானத்திற்கு வாக்குறுதியளிக்கும் முதலீட்டு சலுகைகளை எளிதில் நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ இணையக் குற்ற எச்சரிக்கை அகப்பக்கம் மூலம் வணிகக் குற்றங்கள் குறித்த சமீபத்திய தகவல்களைப் பெறுமாறும் ஷாருலானுவார் அறிவுறுத்தினார்.
மோசடியால் பாதிக்கப்படும் பொதுமக்கள் உடனடியாக தேசிய மோசடி பதிலளிப்பு மையத்தை (என்.எஸ்.ஆர்.சி.) 997 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
முதலீட்டு மோசடியில் சிக்கி பெண் வர்த்தகர் வெ.500,000 இழந்தார்
8 செப்டெம்பர் 2025, 3:44 AM