புத்ராஜெயா, செப். 5 - சாரா ரஹ்மா அடிப்படை உதவித் திட்டத்தின் ஐந்தாவது நாளான நேற்று விற்பனை சுமூகமாக நடைபெற்றது. இரவு 9.30 மணி நிலவரப்படி 17 லட்சம் பெறுநர்களை உள்ளடக்கிய 10 கோடியே 61 லட்சம் வெள்ளி விற்பனையை அது பதிவு செய்தது.
கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 3) பதிவு செய்யப்பட்ட விற்பனையுடன் ஒத்துப்போகும் வகையில் நேற்றைய பரிவர்த்தனை விகிதம் 99.5 சதவீதமாக நிலையாக இருந்ததாக நிதி அமைச்சு தெரிவித்தது.
கடந்த நான்கு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட கணினி மேம்பாடுகள் மற்றும் செயலாக்க திறன் விரிவாக்கம் ஆகியவை நேற்றைய விற்பனை நிலைத்தன்மைக்கு பங்களித்தன என்று அது ஒரு அறிக்கையில் குறிப்பிட்டது.
கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது முதல் 66 லட்சத்திற்கும் அதிகமானோர் அல்லது நாடு முழுவதும் உள்ள 30 சதவீத பெறுநர்கள் சாரா நிதியைப் பயன்படுத்தி 42 கோடியே 52 லட்சம்
வெள்ளி மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை வாங்கியுள்ளனர்.
இந்த சாரா திட்டத்தின் கீழ் மைகார்டில் சேர்க்கப்படுள்ள 100 வெள்ளி டிசம்பர் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும் நாடு முழுவதுமுள்ள 7,300க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் இதனைப் பயன்படுத்தலாம் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
சாரா உதவி-வெ.106 மில்லியன் விற்பனை பதிவு
5 செப்டெம்பர் 2025, 4:58 AM