கோலாலம்பூர், செப் 4 - இந்த ஆண்டு முழுவதும் 20,000 ரஹ்மா மடாணி தொடர் விற்பனைத் திட்டங்களை மேற்கொள்ள உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் இலக்கு கொண்டுள்ளது.
கடந்த ஜூலை 23-ஆம் தேதி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூடுதல் ஒதுக்கீடுகளை அறிவித்ததைத் தொடர்ந்து, ரஹ்மா மடாணி தொடர் விற்பனைத் திட்டங்களை அதிகரிக்க இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமாட் அலி தெரிவித்தார்.
"2025-ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நாடு முழுவதும் மொத்தம் 15,308 ரஹ்மா மடாணி தொடர் விற்பனைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
இன்று, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தின் போது, டத்தோ அர்மிசான் முஹமாட் அலி இவ்வாறு கூறினார்.
வாழ்க்கைச் செலவின சுமையைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருள்களை மக்கள் வாங்குவதை அதிகரிப்பதே இம்முயற்சியின் நோக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
சந்தை விலையை விட 10 முதல் 30 விழுக்காடு குறைந்த விலையில் ரஹ்மா மடாணி விற்பனைத் திட்டங்களில் அடிப்படை பொருள்கள் விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்னாமா