கோத்தா பாரு, செப். 4 - கல்வியமைச்சின் கீழ் நாடு முழுவதும் இருக்கும் மொத்தம் 200 உறைவிடப் பள்ளிகளில் விரைவில் 30 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி.டி.வி.)
பொருத்தப்படும்.
பள்ளிகளில், குறிப்பாக தங்கும் விடுதிகளில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் அசாம் அகமது தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தேவை மற்றும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்தும் பணி கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும்.
அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பெரிய தங்கும் விடுதிகள் முன்னுரிமைக்கான அளவுகோலாக இருக்கும் என்று அவர் இன்று மலேசிய பள்ளி முதல்வர்களின் கல்வி மேலாண்மை மீதான 63வது தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
தங்கும் விடுதிப் பகுதிகளில் சி.சி.டி.வி.களைப் பொருத்துவதற்கான பொருத்தமான இடம் குறித்து நிபுணர்களின் ஆலோசனை பெறப்படும் என்று முகமட் அசாம் கூறினார்.
கழிப்பறைகள் போன்ற இடங்களில் அவற்றை விருப்பம் போல் நிறுவ முடியாது. மாணவர்களின் தனியுரிமை பாதிக்கப்படுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை. மேலும், கடைபிடிக்க வேண்டிய சட்டங்கள் நடப்பில் உள்ளன. எனவே இந்த விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பள்ளி முதல்வர்கள் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சி.சி.டி.வி. பொருத்துவது தவிர, விடுதி வார்டன்களைச் சேர்க்கவும் தனது தமது தரப்பு திட்டமிட்டுள்ளதாக முகமட் அசாம் கூறினார்.
கல்வியமைச்சின் கீழுள்ள 200 உறைவிடப் பள்ளிகளில் சி.சி.டி.வி. பொருத்தப்படும்
4 செப்டெம்பர் 2025, 9:03 AM