ஷா ஆலம், செப். 4 - பொது இடங்களில் காணப்படும் பழைய வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகம், இவ்வாண்டு முழுவதும் கைவிடப்பட்ட 276 கார்களுக்கான உரிமையை நீக்கியுள்ளது.
கடந்த ஆண்டு மற்றும் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 1,386 புகார்களின் அடிப்படையில் 1,139 கைவிடப்பட்ட கார்களை வெற்றிகரமாக அப்புறப்படுத்தப்பட்டதாக நகராண்மைக் கழகம் தெரிவித்தது.
பொது இடங்களில் சேதமடைந்த மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை பெருகுவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக நகராண்மைக் கழகம் அமலாக்கத் துறை மூலம் நீதிமன்ற நடவடிக்கை எடுத்து கைவிடப்பட்ட வாகனங்கள் பிரச்சனையைத் தீர்க்க முயன்று வருகிறது.
இதன் அடிப்படையில் 562 விசாரணை அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 441 ஆவணங்கள் வாகனங்களை உரிமை நீக்கம் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுள்ளன என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பொதுமக்கள் தாமாக முன்வந்து வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கு உதவுவதற்காக எம்.பி ஏ ஜே.வின் கைவிடப்பட்ட வாகன ஓரிட மைய சேவையைப் பயன்படுத்தி வாகன உரிமையை ரத்து செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
சாலைப் போக்குவரத்துத் துறையில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பிறகு கைவிடப்பட்ட கார்களை நிர்வகிக்க இந்த ஓரிட மையம் பொதுமக்களுக்கு உதவுகிறது. இதன் வழி சுத்தமான மற்றும் பாதுகாப்பான அம்பாங் ஜெயா நகர சூழலை உருவாக்க உதவுகிறது என்று நகராண்மைக்கழகம் குறிப்பிட்டது.
கைவிடப்பட்ட 1,100 கார்களை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் அகற்றியது
4 செப்டெம்பர் 2025, 3:44 AM