காஸா, செப். 4 - காஸா பகுதியில் இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிகாலை முதல் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் குறைந்தது 95 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பாலஸ்தீன செய்தி மற்றும் தகவல் நிறுவனம் (வாஃபா) கூறியது.
நேற்று அதிகாலை முதல் பாதிக்கப்பட்ட அனைவரின் உடல்களும் காஸாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.
இறந்த 35 பேரின் உடல்கள் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கும் நான்கு உடல்கள் ஷேக் ரத்வான் மருத்துவமனைக்கும் 10 உடல்கள் அல்-அவ்தா மருத்துவமனைக்கும் மூன்று உடல்கள் அல்-அக்ஸா மருத்துவமனைக்கும் 31 உடல்கள் நாசர் மருத்துவமனைக்கும், மேலும் 12 உடல்கள் அரபு அல்-அஹ்லி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன.
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடந்த மார்ச் 18ஆம் தேதி ஒருதலைப்பட்சமாக முடிவுக்குக் கொண்டு வந்து தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதன் மூலம் தனது ஆக்கிரமிப்பை மீண்டும் தொடங்கியது.
இத்தாக்குதல்களில் குறைந்தது 11,502 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 48,900 பேர் காயமடைந்தனர் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உயிரிழந்த 95 பேரின் உடல்களும் 281 காயமடைந்தவர்களும் காஸாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டனர்.
அதே காலகட்டத்தில், உணவு தேடி வந்த 12 பேரை இஸ்ரேல் இராணுவம் கொன்றது. இத்தாக்குதலில் மேலும் 90 பேர் காயமடைந்தனர். இதனால், உதவி தேடி வந்தவர்களில் இறப்பு எண்ணிக்கை 2,306 ஆகவும் காயமடைந்தோர் எண்ணிக்கை 16,929 பேராகவும் அதிகரித்துள்ளது.
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் - 95 பாலஸ்தீனர்கள் பலி
4 செப்டெம்பர் 2025, 2:42 AM