கோலாலம்பூர், செப். 4 - இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் நேற்று காலை சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற சீனாவின் வெற்றி தின அணிவகுப்பில் பங்கேற்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னைச் சந்தித்து அளவளாவும் வாய்ப்பினைப் பெற்றார்.
வட கொரிய உச்ச தலைவருடன் கைகுலுக்கி உரையாடும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாக பிரதமர் அன்வார் தனது முகநூலில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்தார்.
நான் தற்செயலாக வட கொரிய அரசாங்கத் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்தித்தேன். அவர் தியானன்மென் சதுக்கத்தில் அணிவகுப்பைக் காண வந்திருந்தார். அவருக்கு வணக்கம் தெரிவித்து உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பிரதமர் அன்வாரும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் காலை 8.30 மணிக்கு சதுக்கம் வந்தடைந்தனர். அவர்களை சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் முதல் பெண்மணி பெங் லியுவான் ஆகியோர் வரவேற்றனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், கம்போடிய மன்னர் நோரோடோம் சிஹாமோனி, மங்கோலிய அதிபர் உக்னா குரேல்சுக், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ மற்றும் மியான்மரின் இடைக்கால அதிபர் மின் ஆங் லைங் உள்ளிட்ட 26 வெளிநாட்டுத் தலைவர்கள் இந்த பெரிய அளவிலான இராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டதாக சீன வெளியுறவு அமைச்சு கூறியது.
சீன ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பிய இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இவ்விரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு குறித்து இணையவாசிகள் பரவலாகக் கருத்துகளைத் தெரிவித்தனர். அவர்கள் பெரும்பாலும் உலகத் தலைவர்களுடனான பிரதமரின் நெருக்கத்தைப் பாராட்டினர்.
சீனாவில் வட கொரிய தலைவருடன் பிரதமர் சந்திப்பு - கைக்குலுக்கி அளவளாவினார்
4 செப்டெம்பர் 2025, 1:57 AM