ஷா ஆலம், செப் 3: ஆகஸ்ட் 28 அன்று காஜாங்கில் உள்ள ஒரு ஹோம்ஸ்டேவில் தனிப்பட்ட உடைமைகள் தொலைந்து போன வழக்கு விசாரணை தொடர்பில் ஓர் அதிகாரி மற்றும் சில காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் நடந்த ஒரு நாளுக்குப் பிறகு, ஹோம்ஸ்டே வாடகைதாரர்களில் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.
இந்த புகார் காஜாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) கிடைத்ததாகவும், தண்டனைச் சட்டப் பிரிவு 380 இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
"ஆகஸ்ட் 28ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் குறிப்பிட்ட வளாகத்தில் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் காரணமாக சத்தம் ஏற்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு சோதனை நடத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டது.
புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வாடகைதாரர் சோதனைக்குப் பிறகு அறை கலைந்து இருப்பதைக் கண்டதோடு, லட்சக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களை இழந்ததாகக் கூறினார்.
சோதனையில் ஈடுபட்ட அதிகாரி மற்றும் உறுப்பினர்களைக் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஷாசெலி தெரிவித்தார்.
மேலும் தண்டனைச் சட்டப் பிரிவு 380 இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
-- பெர்னாமா