ஷா ஆலம், செப். 3 - பெஸ்தாரி ஜெயா, புக்கிட் பாடோங் தோட்டத் திருவிழாவின் போது வானை நோக்கி துப்பாக்கி வேட்டு கிளப்பிய ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐம்பத்தைந்து வயதுடைய அந்த ஆடவர் நேற்று முன்தினம் இரவு 8.00 மணியளவில் பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டதாக கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஸாருடின் தாஜூடின் கூறினார்.
ஆடவர் ஒருவர் வானை நோக்கி துப்பாக்கியால் சுடுவதைச் சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை 3.50 மணியளவில் இச்சம்பவம் தொடர்பில் தாங்கள் புகாரைப் பெற்றதாக அவர் சொன்னார்.
நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் அந்த ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்திர திருவிழாவின் போது குறிப்பிட்ட ஆடவர் வானை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வு துறை மற்றும் கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமையக குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணைக்காக பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்தனர் என்று அவர் தெரிவித்தார்.
அவ்வாடவர் நாளை 4ஆம் தேதி வரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர். இவ்வழக்கு 1960ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் 39வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் விசாரணை அதிகாரி முகமது இக்வான் முகமது ஜூக்கி அல்லது கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கை அறையை 03-32891222 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.