கோலாலம்பூர், செப். 2 - போலிச் செய்திகளைப் பரப்பும் பிரச்சனையைக் கையாள்வதில் அரச மலேசிய போலீஸ் படைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் சமூக ஊடகத் தளமான டிக்டோக் தாமதம் செய்ததைத் தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை (செப்டம்பர் 4) புக்கிட் அமானுக்கு வரும்படி அந்நிறுவனத்தின் உயர் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் பரவிய பிரச்சனைகள் உட்பட ஸாரா கைரினா மகாதீர் வழக்கில் உடற்கூறு நிபுணர் என்று கூறிக்கொண்ட ஒரு நபரின் பதிவும் இதில் அடங்கும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாஹ்மி பாட்ஸில் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் தகவல்களை வழங்குவதில் டிக்டோக் மிகவும் மந்தமாகச் செயல்பட்டதால் இது ஒரு குற்றம் என்றும் உங்கள் அமைப்பு மிகவும் மத்தமாகச் செயல்பட்டது என்றும் தெரிவிக்க டிக் டோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஷோ ஜி சியூவை அழைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது என அவர் சொன்னார்.
இத்தகைய மெத்தனப் போக்கை நாங்கள் அனுமதிக்க முடியாது. எதிர்வரும் வியாழக்கிழமை புக்கிட் அமானில் தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் மற்றும் சட்டத் துறைத் தலைவர் டான் ஸ்ரீ முகமட் துசுகி ஆகியோருடன் கூட்டம் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்குள்ள துன் அப்துல் ரசாக் தகவல் மற்றும் ஒளிபரப்பு நிறுவனத்தில் நடைபெற்ற ஏ.ஐ. கிராண்ட் பிரிக்ஸ் 2025 மாநாட்டிற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறினார்.
டிக்டோக் தவிர, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் இன்காப்ரேட்டட் (மெட்டா) நிறுவனமும் தங்கள் தளத்தில் ஒழுக்கக்கேடான உள்ளடக்கம் பரவுவது குறித்து விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்படும் என்று பாஹ்மி கூறினார்.
அடையாளம் காணப்பட்ட பிரச்சனைகளில் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் வழியாக பரப்பப்பட்ட "பள்ளி மாணவர்கள் கும்பல்" என்ற இணைய குழுவை உள்ளடக்கியது. ஓப் பெடோ சோதனையில் கண்டறியப்பட்ட பாலியல் தொடர்பான உள்ளடக்கம் பரவலும் இதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த தளங்கள் தீவிரமான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பதை நாங்கள் காண்கிறோம். எனவே, கலந்தாய்வு செயல்முறை தொடரும். மேலும் பொருந்தக்கூடிய மலேசிய சட்டங்களை நாங்கள் அவர்களுக்கு உறுதிப்படுத்துவோம் என்று அவர் கூறினார்.
விசாரணைக்கு புக்கிட் அமான் வர டிக்டோக் நிறுவன தலைமைக்கு உத்தரவு
2 செப்டெம்பர் 2025, 10:12 AM