கோலாலம்பூர், செப். 2 - மடாணி அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு முறை மட்டுமே பெறக்கூடிய 100 வெள்ளி ரஹ்மா அடிப்படை உதவித் தொகையை (சாரா) பொதுமக்கள் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை செலவிடலாம்.
பணம் செலுத்தும் முகப்பிடங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் அளவுக்கு இந்த உதவியைப் பயன்படுத்துவதில் அவசரப்பட வேண்டாம் என்று தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் மக்களுக்கு அறிவுறுத்தினார்.
நீண்ட வரிசையில் காத்திருப்பது குறித்து நீங்கள் கவலைப்பட்டால் அருகிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அல்லது பேரங்காடிகளுக்கு செல்லலாம்.
இந்தத் தொகையைப் பயன்படுத்த உங்களுக்கு நான்கு மாத கால அவகாசம் இருப்பதால் கவலைப்பட வேண்டாம் என்று இன்று மைகாசே திட்டத்தில் பங்கேற்ற ஒரு சில்லறை விற்பனைக் கடைக்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
அது தவிர, மைகாசே செயல்பாட்டு முறை இப்போது 60 சதவீத திறனுடன் மிகவும் நிலையானதாக இருப்பதால் மைகார்ட்டைப் பயன்படுத்தி உதவியைப் பெறும்போது ஏற்படக்கூடிய கணினி இடையூறுகள் குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று தியோ அறிவுறுத்தினார்.
ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் மைகார்ட்டில் உதவித் தொகையாக 100 வெள்ளி வரவு வைக்கப்பட்ட பிறகு அத்திட்டத்தின் முதல் இரண்டு நாட்களில் மந்தமான கணினி செயல்திறன் குறித்த பல புகார்கள் கிடைத்ததைத் தொடர்ந்து நிதி அமைச்சு உரிய நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.
இத்திட்ட உதவியைப் பெறுவதற்கு அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் முயற்சித்ததால் முதல் மற்றும் இரண்டாவது நாட்களில் கணினி செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன். இப்போது மக்கள் சாரா திட்டத்தைப் பயன்படுத்தி கொள்முதல் செய்வது பற்றி கவலைப்படத் தேவையில்லை அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, உதவித் தொகையை மீட்பதற்கான சுமூகமான செயல்முறை குறித்து சாரா பெறுநரான கே. அமுதா (வயது 50) மனநிறைவு தெரிவித்தார்.
பணத்தை மிச்சப்படுத்தி இந்த 100 வெள்ளியை வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கப் பயன்படுத்தலாம். பணம் செலுத்தும் செயல்முறை விரைவானது மற்றும் எளிதானது. பரிவர்த்தனைக்கு அவர்கள் அடையாள அட்டையை மட்டுமே கேட்பார்கள். ஸ்கேன் செய்த பிறகு பணத்தை செலுத்த முடியும் என்று பாலர் பள்ளி ஆசிரியரான அவர் கூறினார்.
சாரா வெ.100 உதவித் தொகையை டிசம்பர் 31 வரை செலவழிக்கலாம்
2 செப்டெம்பர் 2025, 9:51 AM