கோலாலம்பூர், செப். 2 - ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்தின் (சாரா) கீழ் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது நடைபெற்ற பரிவர்த்தனையின் அளவு இரண்டே நாட்களில் 11 கோடி வெள்ளியை எட்டியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 17 லட்சத்திற்கும் அதிகமான பயனீட்டாளர்கள் பொருள்களை கொள்முதல் செய்துள்ளனர்.
நேற்று இரவு 9.30 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 900,000க்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் 6 கோடி வெள்ளியைச் செலவிட்டுள்ளதாக நிதி அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
நேற்றைய உயர்விற்குப் பிறகு மைகாசேவின் கணினித் திறன் அதிகரித்துள்ள நிலையில் இரண்டாவது நாளில் 20 விழுக்காடு கூடுதல் பரிவர்த்தனைகளை பதிவு செய்ய முடிந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
நகர்ப்புறங்களில் உள்ள சில பேரங்காடிகளில் மதியம் 1.00 மணி முதல் 2.30 மணி வரையிலான உச்ச நேரங்களில் நெரிசல் காணப்பட்டது.
நிலைமையை சமாளிக்கவும் பிரச்சினைகளை நேரடியாகத் தீர்க்கவும் வர்த்தகர்களுக்கு உதவும் வகையில் மைகாசே பணியாளர்கள் பேரங்காடிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சு தெரிவித்தது.
பரிவர்த்தனைகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக வார நாட்களில் காலையில், குறிப்பாக உச்ச நேரங்களுக்கு அப்பால் ஷாப்பிங் செய்யுமாறு பொதுமக்களுக்கு அமைச்சு அறிவுறுத்தியது.
மைகார்டுகளில் நேரடியாகச் செலுத்தப்படும் சாரா 100 வெள்ளி உதவித் தொகை டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும். நாடு முழுவதும் உள்ள 7,300க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் இதனைப் பயன்படுத்தி பொருள்கள் வாங்கலாம்.
வார இறுதியில் சாரா பரிவர்த்தனை 11 கோடி வெள்ளியை எட்டியது
2 செப்டெம்பர் 2025, 4:56 AM