பாரிஸ், செப். 2 - காஸா தீபகற்பத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலையைக் கண்டிக்கும் விதமாக உலகின் 70 நாடுகளைச் சேர்ந்த 250 ஊடக ஸ்தாபனங்கள் நேற்று தங்கள் பத்திரிகை மற்றும் இணைய ஊடகத்தின் முதல் பக்கத்தை கருப்பு நிறத்தில் வெளியிட்டதோடு ஒளிபரப்பையும் நிறுத்தியதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் (டிபிஏ) கூறியது.
ஈராண்டுகளுக்கும் குறைவான காலக்கட்டத்தில் காஸாவில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 220 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எல்லைகளற்ற ஊடக அமைப்பு (ஆர்.எஸ்.எஃப்.) கூறியது.
இஸ்ரேலிய இராணுவத்தின் இத்தகைய கொடூரத் தாக்குதல்களால் காஸாவில் பெரும் எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதானது அங்கு நடப்பதை வெளியில் தெரிவிப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதைக் காட்டுகிறது என்று அந்த அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இந்த போர் காஸாவுக்கு எதிரானது அல்ல. மாறாக ஊடகத் துறைக்கு எதிரானது என்று ஆர்.எஸ்.எஃப். தலைமை இயக்குநர் திபாவுட் புருட்டின் கூறினார்.
தங்களின் இலக்கு பாலஸ்தீன ஹமாஸ் தரப்பினர் மட்டுமே என்றும் பொது மக்கள் கொல்லப்படுவதை தவிர்க்க தாங்கள் முயன்று வருவதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து கூறி வருகிறது.
பத்திரிகையாளர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் என்றும் அவர்கள் 2023 அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகிறது.
கடந்த வாரம் நிகழ்ந்த தாக்குதல்களில் ஐந்து ஊடகவியாளர்கள் கொல்லப்பட்டத்தை தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவத்தின் தளபதி இயெல் ஜாமிர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.