புத்ராஜெயா, செப். 2 - கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பாகிஸ்தானில் உள்ள மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 800 பேர் கொல்லப்பட்டதோடு பெரும் சேதமும் ஏற்பட்டது.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கிழக்கு ஆப்கானிஸ்தான் வட்டாரத்தை உலுக்கிய வலுவான நிலநடுக்கம் மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நில அதிர்வுகளின் விளைவுகளை வெளியுறவு அமைச்சு அணுக்கமாக கண்காணித்து வருவதாக அது அறிக்கை ஒன்றில் கூறியது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட பல இடங்களில் இந்த நிலநடுக்கம் பரவலாக உணரப்பட்டது. 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நிலநடுக்கத்தின் வலுவான தாக்கத்தை உணர்ந்தனர். அதே நேரத்தில் தொலைதூர மலைப்பகுதிகளில் பரவலான சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமாபாத்தில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் பாகிஸ்தானில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சு நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதோடு நிலைமையை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மலேசியர்கள் விழிப்புடன் இருக்கவும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் தகவல்களைப் பெறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தங்கள் வருகையை இன்னும் பதிவு செய்யாதவர்கள் ஆதரவு மற்றும் தகவல் தொடர்புகளை உடனடியாக பெறுவதை உறுதிசெய்ய மின்-தூதரகம் வழியாக அவ்வாறு செய்யுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பூகம்பம் - மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை
2 செப்டெம்பர் 2025, 3:00 AM