சபாக் பெர்ணம், செப். 1- சிலாங்கூரின் வட மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் சீராகவும் மக்களுக்கு பலனளிக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய அத்திட்டங்களின் மேம்பாட்டை தாம் நேரில் கண்காணிக்கவுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வளர்ச்சி என்பது பெருநகரங்களை மட்டும் மையம் கொள்ளாமல் கிராமப்புறங்களையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என அவர் சொன்னார்.
நாங்கள் ஷா ஆலம் மற்றும் பெட்டாலிங் ஜெயா மீது மட்டும் கவனம் செலுத்தாமல் சபாக் பெர்ணம், தஞ்சோங் காராங், கோல சிலாங்கூர் மாநிலத்தின் வடபகுதிகள் மீதும் கவனம் செலுத்துகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு இங்குள்ள சுங்கை பெசார் அரங்கில் நடைபெற்ற மாநில நிலையிலான 2025 தேசிய தின பாரம்பரிய கிராம கண்காட்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
உள்ளுர் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள சபாக் பெர்ணம் மேம்பாட்டுப் பகுதி திட்டத்தில் சபாக் பெர்ணம் மற்றும் கோல சிலாங்கூரை இணைக்கும் உத்தேச இரயில் திட்டமும் அடங்கும் என அமிருடின் குறிப்பிட்டார்.
உள்ளுர்வாசிகள் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த இடத்திலேயே வசித்துக் கொண்டு கோலாலம்பூரில் வேலை செய்தவற்குரிய வாய்ப்பினை இந்த திட்டம் வழங்கும். இதுதான் பொறுப்புள்ள ஒரு அரசின் பணியாகும். நாங்கள் நேற்று நடந்ததைப் பற்றி பேசவில்லை. அடுத்த 30 ஆண்டுகளுக்கு திட்டமிடுகிறோம் என்றார் அவர்.
இதனிடையே. பல்வேறு விளையாட்டுகளை ஏற்று நடத்துவதற்கு ஏதுவாக சபாக் பெர்ணம் அரங்கை மறுசீரமைப்பு செய்வதற்கு 20 லட்சம் முதல் 30 லட்சம் வெள்ளி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் சொன்னார்.
சுங்கை பெசார் அரங்கம் சதுரங்கம் போன்ற சிறிய அளவிலான போட்டிகளை மட்டுமின்றி பெரிய விளையாட்டுகளையும் ஏற்று நடத்துவதற்கான ஆற்றலைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.