கிள்ளான், ஆக. 29- இங்குள்ள பிரபல வர்த்தக மையமான லிட்டில் இந்தியா பகுதியில் சட்டவிரோதமான முறையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்கும் விதமாக கூடுதல் அறிவிப்பு பலகைகளை கிள்ளான் அரச மாநகர் மன்றம் (எம்.பி.டி.கே.) நிறுவியுள்ளது.
வாகனங்களை மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் இழுத்துச் செல்வதைத் தவிர்க்கும் விதமாக வாகனமோட்டிகளுக்கு முன்னெச்சரிக்கை வழங்கும் நோக்கில் லிட்டின் இந்தியாவின் முக்கிய சாலைகளில் இந்த அறிவிப்பு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளதாக கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர் பி.யுகராஜா கூறினார்.
இங்குள்ள ஜாலான் துங்கு கிளானா, ஜாலான் துங்கு டியாவுடின், ஜாலான் டத்தோ ஹம்சா, ஜாலான் மோஹிட் உள்ளிட்ட சாலைகளில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துவதற்கு எதிராக போதுமான அறிவிப்பு பலகைகள் இல்லாததால் பலர் சாலையோரம் தங்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இத்தகைய வாகனங்களை அமலாக்கத் தரப்பினர் இழுத்துச் செல்லும் போது உரிமையாளர்கள் வாகனங்களைத் திரும்பப் பெறுவதில் பொருளாதார ரீதியில் மட்டுமின்றி .நடைமுறைச் சிக்கல்களையும் எதிர் கொள்கின்றனர். ஆகவே, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளை அமைக்க மாநகர் மன்றம் முடிவெடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும் பட்சத்தில் அதனை திரும்பப் பெற யாரை? எப்படி தொடர்பு கொள்வது போன் விபரங்கள் அடங்கிய கியூ.ஆர். குறியீடும் இந்த அறிவிப்பு பலகைளில் இடம் பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார்.
பலர் வாகனங்களை பொறுப்பற்ற முறையில் கண்ட இடங்களில் நிறுத்துவதால் இவ்வட்டாரத்தில் குறிப்பாக, பெருநாள் காலங்களில் அதிக நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அவசர வேளைகளில் விரைந்துச் செல்வதற்கும் பெரும் இடையூறாக உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மாநகர் மன்றம் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.