ஷா ஆலம், ஆக. 29 - ஜகார்த்தாவில் நேற்றிரவு நிகழ்ந்த கலவரத்தின் போது மோட்டார் சைக்கிள் வாடகை சேவை ஓட்டுநர் ஒருவர் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஃபான் குர்னியாவன் (வயது 21)
என்ற அந்த இளைஞர் தரையில் விழுந்து கிடந்த நிலையில் அதிவேகத்தில் வந்த போலீஸ் கவச வாகனம் ஒன்று அவரை மோதிச் செல்வதை காட்டும் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பிபிசி நியூஸ் இந்தோனேசியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பொது மக்கள் வாகனத்தைத் துரத்திச் சென்று நிறுத்த முயற்சிப்பதையும் அந்த காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன.
பின்னர், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரசெட்யோ ஹாடி மூலம் அதிபர் மாளிகை இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கோரியது. எதிர்பாராத இந்த சம்பவத்திற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்த சம்பவத்திற்கு தங்களின் அனுதாபத்தை தெரிவித்த தேசிய காவல்துறையின் புரோபாம் பிரிவின் தலைவர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்துல் கரீம், முடிந்தவரை நியாயமாக தாங்கள் விசாரணையை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.