கோலாலம்பூர், ஆக. 29- நாட்டின் 68வது தேசிய தினத்தை முன்னிட்டு மலேசியர்களிடையே ஒற்றுமை மற்றும் நாட்டுப்பற்றை வளர்க்கும் விதமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை சிறப்புரையை வழங்கவிருக்கிறார்.
செர்டாங் வேளாண் கண்காட்சிப் பூங்காவில் (மேப்ஸ்) நடைபெறும் இந்நிகழ்வில் அரசு ஊழியர்கள் சீருடைப் பணியாளர்கள், கல்விமான்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகர்கள் உள்பட 4,000 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ ஃபாடில்லா பூசுப், தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் ஆரோன் அகோ டாகாங், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோர் இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிவர்.
தபிக்கா பெர்பாடுவானைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களின் ருக்குன் நெகாரா கேட்பாட்டை வாசிக்கும் நிகழ்வு, ஹர்மோனி மடாணி எனும் தலைப்பிலான கலாசார நிகழ்களும் இதில் இடம் பெறும்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலாதவர்கள் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பிரதமரின் உரையை செவிமடுக்கலாம்.
இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டம் புத்ரா ஜெயாவில் ‘மலேசியா மடாணி-ராக்யாட் டிசந்துனி‘ எனும் கருப்பொருளில் நடைபெறும்.