கோலாலம்பூர், ஆக. 29 - தீயணைப்பு வீரர் எனக் கூறிக்கொண்டு பொது மக்களிடம் நிதி வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஆடவருக்கு எதிராக விழிப்புடன் இருக்கும்படி சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
காப்பார் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்தவர் எனக் கூறிக்கொண்ட நபர், தனக்கு உடனடியாக பண உதவி தேவைப்படுவதாக சிலரிடம் டிக்டாக் செயலி வாயிலாக கோரியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.
மக்களை நம்ப வைப்பதற்காக தம்மை காப்பார் தீயணைப்பு நிலையத்தில் சந்திக்கலாம் எனவும் கூறியுள்ளார். அந்த ஆண் நபரிடம் ஏமாற்றப்பட்ட சிலர் காப்பார் தீயணைப்பு நிலையத்தைத் தொடர்பு கொண்டுள்ளனர் என்று நேற்று தொடர்பு கொண்ட போது அவர் தெரிவித்தார்.
காப்பார் தீயணைப்பு நிலைய உறுப்பினர்கள் அடிக்கடி செல்லும் உணவகம் ஒன்றையும் அந்த ஆண் நபர் தொடர்பு கொண்டு தனது கைவரிசையைக் காட்டியதோடு தனது பெயரைக் கொண்டு QR குறியீட்டையும் அவர் வழங்கியுள்ளார் என்றார்.
இது தவிர, காப்பார் வட்டாரத்திலுள்ள நான்கு கடைகளில் தாம் காப்பார் தீயணைப்பு நிலைய உறுப்பினர் எனக் கூறி போலியாக உணவு ஆர்டர் செய்தது கண்டறியப்பட்டது என அவர் சொன்னார்.
இந்த மோசடிப் பேர்வழிக்கு எதிராக நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.