ஷா ஆலம், ஆக. 28 - மாணவர்களின் எதிர்கால கல்வி, தொழில் வளர்ச்சிக்கு ஆங்கில மொழித் திறன் மிக அவசியம் என்று ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அஸ்மி கூறினார்.
ஆங்கில மொழியாற்றல் மாணவர்களின் பள்ளிப் படிப்பில் உதவுவது மட்டுமல்லாமல் அவர்கள் தங்கள் படிப்பை உயர் மட்டத்திற்குத் தொடர்வதற்கு முக்கிய அடித்தளமாகவும் விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
ஆங்கிலப் புலமை எதிர்காலத்தில் அதிக கல்வி மற்றும் தொழில்முறை வாய்ப்புகளைத் திறக்கும் என்பதால் ஆரம்ப கட்டத்திலிருந்தே மொழி மற்றும் அறிவுத் தேர்ச்சியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
செர்டாங் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி ஏற்பாட்டில் நடைபெற்ற ஆங்கில மொழி மேம்பாடு மற்றும் தேர்ச்சித் திட்ட நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சுபாங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர் தெய் ஹான் செர்க் மற்றும் ஸ்ரீ செர்டாங் தொகுதி இந்திய சமூகத் தலைவர் சந்திரசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்
நமது பிள்ளைகள் சிலாங்கூர் மாநிலத்தின் மதிப்புமிக்க சொத்துக்கள், அவர்கள் எதிர்காலத்தில் நாட்டின் தலைமையையும் வளர்ச்சியையும் வடிவமைக்கப் போகிறார்கள்.
ஆகவே, இது போன்ற பயிற்சித் திட்டங்கள் மிகவும் முக்கியமானவை என அஸ்மி கூறினார்.
பிள்ளைகளின் சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய எப்போதும் உறுதிபூண்டுள்ள பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய அவர், மாணவர்களின் வெற்றி அனைவருக்கும் பெருமை சேர்ப்பதோடு சிலாங்கூரை ஒரு வளர்ந்த மற்றும் போட்டி நிறைந்த மாநிலமாக மாற்றவும் உதவும் என்றார் அவர்.