ஜோகூர் பாரு, ஆக. 28 - போலி இணைய முதலீட்டுத் திட்டத்தில் பங்கு கொண்ட ஜோகூரைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி ஒருவர் 26 லட்சம் வெள்ளியை இழந்தார்.
நாற்பத்து ஐந்து வயதான பாதிக்கப்பட்ட நபர் கடந்த மே 25 ஆம் தேதி சமூக ஊடகங்களில் வெளிவந்த பங்கு முதலீட்டு தொடர்பான விளம்பரத்தைக் கண்டதாக ஜோகூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாட் கூறினார்.
பின்னர் அவர் ஒரு வாட்ஸ்அப் இணைப்பைக் கிளிக் செய்து சந்தேக நபரைத் தொடர்பு கொண்டதாகவும் ஐந்து முதல் 15 சதவீதம் வரை வருமானம் ஈட்டித் தரும் வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்க அந்நபர் முன் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனது முதலீடுகளைக் கண்காணிக்க உதவும் வகையில் கைப்பேசியில் ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யும்படியும் பாதிக்கப்பட்ட நபர் கேட்டுக் கொள்ளப்பட்டார் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த மே 25 முதல் ஆகஸ்ட் 8 வரை சந்தேக நபரின் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்டவர் எட்டு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 26 லட்சத்து 3 ஆயிரத்து 900 வெள்ளியை 56 பணப் பரிமாற்றங்கள் வழி அனுப்பியுள்ளார்.
வழங்கப்பட்ட செயலி மூலம் முதலீட்டு நிதியை எடுக்க முடியாமல் போனதால் தாம் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார்.
அவருக்கு 26 லட்சத்து 3 ஆயிரத்து 900 வெள்ளி இழப்பு ஏற்பட்டது. இந்த மோசடி குறித்து நேற்று அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார் என்று ரஹாமான் கூறினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் இந்த மோசடி வழக்கு விசாரிக்கப்படுகிறது,
போலி இணைய முதலீட்டு திட்டத்தில் மருத்துவ அதிகாரி வெ.26 லட்சம் இழந்தார்
28 ஆகஸ்ட் 2025, 9:01 AM