கோல திரங்கானு, ஆகஸ்ட் 28 - தொலைபேசி அழைப்பு மோசடி கும்பலின் வலையில் சிக்கிய பெண் அரசு ஊழியர் ஒருவர் 124,930 வெள்ளியை இழந்தார்.
காப்புறுதி நிறுவன பிரதிநிதி எனக் கூறிக் கொண்ட ஒரு சந்தேக நபர் கடந்த 26ஆம் தேதி 39 வயதான பாதிக்கப்பட்டவரைத் தொடர்பு கொண்டதாகக் கோலா திரங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நூர் கூறினார்.
"சுகாதார காப்புறுதி கோரிக்கையை நீங்கள் தாக்கல் செய்துள்ளதால் அதற்கான உறுதிபடுத்தும் சான்று தேவை" என சந்தேக நபர் அப்பெண் ஊழியரிடம் கூறியுள்ளார். ஆனால் அப்பெண் அதனை மறுத்ததுள்ளார் அவர் கூறினார்.
பின்னர், போலீஸ் அதிகாரி எனக் கூறப்படும் மற்றொரு சந்தேக நபருடன் தொடர் இணைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டப் பெண் சட்டவிரோதப் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டிய சந்தேக நபர், ஜாமீன் பெற தனிப்பட்ட கடன் வாங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக நிர்பந்தித்துள்ளார்.
சிறை தண்டனை விதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்டப் பெண் 79,000 வெள்ளி தனிநபர் கடனாகப் பெற்று அதனை அவரது சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்தார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பின்னர் சந்தேக நபர் குறிப்பிட்ட காரணங்களுக்காக பாதிக்கப்பட்டவரின் வங்கி அட்டை மற்றும் தொலைபேசி எண்ணை மாற்ற உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்ட காலத்திற்கு கணக்கைப் புதுப்பிக்கவும் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அஸ்லி கூறினார்.
அந்தப் பெண் சந்தேக நபரின் அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்றினார். இருப்பினும், தாம் ஏமாற்றப்பட்டதாக சந்தேகித்த பாதிக்கப்பட்டப் பெண் சரிபார்ப்புக்காக வங்கியிடமிருந்து அறிக்கையைக் கோரினார்.
அதனை சோதித்த போது தனது வங்கிக் கணக்கிலிருந்து தெரியாத ஒரு கணக்கிற்கு ஆறு முறை பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதனால் அவருக்கு மொத்தம் 124,930 வெள்ளி இழப்பு ஏற்பட்டது. இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அஸ்லி கூறினார்.
காப்புறுதி முகவர் எனக் கூறிக்கொண்ட கும்பலிடம் அரசு ஊழியர் வெ.100,000 பறிகொடுத்தார்
28 ஆகஸ்ட் 2025, 4:33 AM