புத்ராஜெயா, ஆக. 28 - இந்தியாவில் பெய்து வரும் தொடர் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் டஜன் கணக்கானோர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டின் வட பகுதியில் சிக்கித் தவிக்கும் தனது பிரஜைகளை கூடிய விரைவில் விமானங்கள் மூலம் வெளியேற்ற மலேசியா ஏற்பாடு செய்து வருகிறது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து புதுடில்லியில் உள்ள மலேசிய தூதரகம் நிலைமையை அணுக்கமாக கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
ஜம்முவிலும் லடாக்கின் லே பகுதியிலும் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் பற்றிய தகவல்களை தூதரகம் பெற்றுள்ளது. அவர்களுடன் அது தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விரைவில் கிடைக்கக்கூடிய விமானங்கள் மூலம் அவர்கள் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மோசமடைந்து வரும் நிலைமையைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசியமற்ற பயணங்களை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கும்படி மலேசியர்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அமைச்சு மேலும் கூறியது.
நிலைமையை அணுக்கமாக கண்காணித்து தேவைப்படும்போது சமீபத்திய தகவல்களை அமைச்சு வழங்கும்.
வெளிநாட்டில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் அமைச்சின் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது என்று அது குறிப்பிட்டது.