கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 - தனியார் பாலர் பள்ளி நடத்துநர்கள் முன்வைத்திருக்கும் கட்டண உயர்வுக்கான விண்ணப்பங்களை இறுதியாக அங்கீகரிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகே சமர்ப்பிக்க முடியும்.
மேலும், இக்கட்டண உயர்வு 30 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு நிபந்தனை விதித்துள்ளது.
தனியார் பாலர் பள்ளி நடத்துநர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு, விண்ணப்பங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
"பாலர் பள்ளி அமைந்திருக்கும் இடம், வழங்கப்படும் வசதிகள் மற்றும் ஆசிரியர் தகுதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் கல்வி அமைச்சு இந்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்.
தனியார் துறை மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பாலர் பள்ளி கட்டணங்களை கட்டுபடுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து செனட்டர் டத்தோ நெல்சன் எழுப்பிய கேள்விக்கு ஃபட்லினா சிடேக் இவ்வாறு பதில் அளித்தார்.
பெர்னாமா