ஷா ஆலம், ஆக. 27 - சிலாங்கூர் நுண்ணறிவு பார்க்கிங் (எஸ்.ஐ.பி.) முறை அமலாக்கத்திற்கான முறையான ஒப்பந்தத்தில் ஷா ஆலம் நகர மன்றம் (எம்.பி எஸ்.ஏ.) அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களுக்குள் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் விதிமுறைகள் பற்றிய விரிவான மதிப்பீட்டு ஆய்வை மாநகர் மன்றம் முடித்த பிறகு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது .
மாநகர் மன்றம் ஒப்புதல் கடிதத்தை வெளியிட்டு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி எஸ்.பி.ஐ.யை அறிமுகப்படுத்தினாலும் மாநகர் மன்றத்தின் நலன் காக்க ரந்தாயான் மெஸ்ரா சென். பெர்ஹாட் மற்றும் ஒப்பந்த நிறுவனமான செல்மெக்ஸ் சென். பெர்ஹாட் உடனான இறுதி முத்தரப்பு ஒப்பந்தம் இன்னும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ பவுஸி முகமது யாத்திம் தெரிவித்தார்.
நாங்கள் ஏற்கனவே ஏற்பு கடிதத்தை வெளியிட்டுவிட்டோம். இப்போது மாநகர் மன்றத்தின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஒப்பந்தத்தை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம். நான்கு முதல் ஆறு மாதங்களுக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
ஏற்புக் கடிதம் ஒரு ஆரம்ப கட்டமாகும். அதே நேரத்தில் அந்த ஒப்பந்தம் முக்கிய விஷயங்களை விரிவாக உள்ளட்டக்கியிருக்கும் என்று அவர் கூறினார்.
ஷா ஆலமில் ஏற்கனவே எஸ்.ஐ.பி. முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது ஆண்டுக்கு சுமார் 2.7 கோடி வெள்ளியாக இருக்கும் மாநகர் மன்றத்தின் பார்க்கிங் வருமானம் தற்போதைய அடிப்படையை விடக் குறையாது என்றும் அவர் உறுதியளித்தார்.
எஸ்.ஐ.பி. ஒப்பந்தத்தில் எம்.பி.எஸ்.ஏ. ஆறு மாதங்களில் கையெழுத்திடும்
27 ஆகஸ்ட் 2025, 6:48 AM