கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 - இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை, கிரிக்கில் இருந்து ஜெலிக்கு செல்லும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை முழுவதிலும் உள்ள 224 சாலைக்குழிகள் மூடப்பட்டுள்ளன.
ரோந்துகள் அல்லது பொதுமக்களின் புகார்களின் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட எந்தவொரு சாலைச் சேதங்களும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பராமரிப்பு குத்தகை நிறுவனத்தால், 24 மணி நேரத்திற்குள் சரிசெய்யப்படும் என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
"அதனைத் தவிர்த்து, எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தால், உடனடி நடவடிக்கையாக, அவசரகாலப் பணிகளை மேற்கொள்வதற்கும் அக்குத்தகை நிறுவனத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது," என்றார்.
அதிகமான மரண விபத்துகளைச் சந்தித்திருக்கும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால உள்கட்டமைப்பு சிக்கல்களுக்கு விரிவான தீர்வுகள் குறித்து செனட்டர் டத்தோ ஷம்சுடின் அப்துல் கஃபார் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு நந்தா லிங்கி இவ்வாறு பதிலளித்தார்.
வழக்கமான பராமரிப்புப் பணிகளைத் தவிர்த்து, விபத்து அபாயப் பகுதிகளில் விளக்குகள் பொருத்துவது உட்பட சாலைப் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா