கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 - மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக (யு.டி.எம்.) ரிசர்வ் அதிகாரிகள் பயிற்சிப் பிரிவின் (பலாபேஸ்) மாணவர் ஷியாம்சுல் ஹாரிஸ் ஷம்சுடின் மரணம் தொடர்பான விசாரணையை புக்கிட் அமானின் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.
அம்மாணவரின் உடலைத் தோண்டி எடுத்து இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தக் கோரி அவரது குடும்பத்தினரின் செய்த விண்ணப்பத்தை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதன் இயக்குனர் டத்தோ எம். குமார் கூறினார்.
நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றுவதற்கு அரச மலேசிய போலீஸ் படை உறுதிபூண்டுள்ளது. மேலும் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்காக சட்ட விதிகளுக்கு ஏற்ப விசாரணை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்தப்படும் என்று உறுதியளிக்கிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சிலாங்கூரில் உள்ள கம்போங் ரிஞ்சிங் உலு முஸ்லிம் மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்பட்ட ஷியாம்சுலின் உடலை தோண்டி எடுக்க உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் குச்சரன் சிங் ப்ரீத்
உத்தரவிட்டார். கோலாலம்பூர் மருத்துவமனையை சேர்ந்த உடற்கூறு நிபுணரால் 14 நாட்களுக்குள் தடயவியல் நிபுணர் மற்றும் குடும்ப வழக்கறிஞர் டத்தோ நரன் சிங் அல்லது அவரது பிரதிநிதி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அந்த உடற்கூறு நிபுணர் ஒரு நியாயமான காலத்திற்குள் சவப்பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும். அதன் நகலை குடும்பத்தினரின் சட்ட ஆலோசகரான மெசர்ஸ் நரன் சிங் & கோவிடம் வழங்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
ஷியாம்சுலின் உடலை தோண்டி எடுப்பதற்கும் விசாரணை நடத்துவதற்கும் அனுமதி கோரி அவரின் தாயார் தாயார் உம்மு ஹைமான் பீ டவலாட்கான் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார்.
ஷியாம்சுல் ஹாரிஸ் (வயது 22) ஜூலை 28 ஆம் தேதி உலு திராமில் உள்ள இராணுவப் போர் பயிற்சி மையத்தில் (புலாடா) பயிற்சியில் இருந்தபோது இறந்தார்.
யு.டி.எம். மாணவர் மரணம் - புக்கிட் அமான் வகைப்படுத்தப்பட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை
27 ஆகஸ்ட் 2025, 4:27 AM