பெட்டாலிங் ஜெயா, ஆக. 27 - மனித மூலதன மேம்பாடு மற்றும் தேசிய போட்டித்தன்மைக்கு மையமாக விளங்கும் செயற்கை நுண்ணறிவை (ஏ.ஐ.) கற்றுத் தேர்வதில் மலேசியா ஒரு போதும் பின்தங்கியிருக்க முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
உலகளாவிய இலக்கவியல் மாற்றத்தை எதிர்கொள்வதில் மலேசியா மீண்டெழும் தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதற்கு புதிய திறன்களையும் தொழில்நுட்பங்களையும் பெறுவதற்கான நாட்டின் திறன் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.
5ஜி மற்றும் ஏ.ஐ. ஆற்றலை மேம்படுத்தவில்லை என்றால் நாம் பின்தங்கி விடுவோம். நமது முன்னேற்றம் மந்தமாகவும் பின்தங்கியதாகவும் இருக்கும். திறன், அறிவுத் திறனை நாடு மேம்படுத்தத் தவறினால் நமது பிள்ளைகள் சிறந்த வேலைகளைப் பெற முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
செல்கோம் டிஜி நிறுவனம் ஏற்பாடு செய்த CD:NXT திட்டத்தை நேற்று இங்கு தொடங்கி வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில், அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார், செல்கோம் டிஜி தலைமைச் செயல் அதிகாரி டத்தோ இடாம் நவாவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மலேசியர்களிடையே காணப்படும் இலக்கவியல் இடைவெளியைக் குறைப்பதற்கான தீர்வுகளாக ஏ.ஐ. மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் ஆகியவையும் செயல்படுவதை என்று அன்வார் சுட்டிக்காட்டினார்.
நகர்ப்புறங்களில் உள்ள அதிர்ஷ்டசாலிகளுக்கும் புறநகர்கள், கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கும் இடையிலான டிஜிட்டல் இடைவெளியின் ஒரு பகுதியை நிவர்த்தி செய்ய ஏ.ஐ. மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.