ஷா ஆலம், ஆக 27 - எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் 2025 சிலாங்கூர் அனைத்துலக பராமரிப்பு உச்சநிலை மாநாடு (எஸ்.ஐ.சி.எஸ்.) பராமரிப்புத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் மாநில அரசுக்கு சிறந்த தளமாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டிற்கு உள்ளும் வெளியிலும் உள்ள தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பராமரிப்பு தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த தரப்பினரை ஒன்றிணைக்கும் வகையில் முதன் முறையாக நடத்தப்படும் இம்மாநாடு, முதுமை அடைந்து வரும் சமூகத்தின் யதார்த்தத்தை எதிர்கொள்வதில் சிலாங்கூரின் தயார் நிலையை உணர்த்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த மாநாட்டில் இடம்பெறும் அறுபது கண்காட்சி அரங்குகள், மன்றங்கள், மாநாடுகள் மற்றும் இணை வணிகம் புதிய யோசனைகள், விவேக ஒத்துழைப்பு மற்றும் சிலாங்கூரில் உள்நோக்கிய முதலீட்டிற்கான ஒரு தளமாக மாற்றும்.
அதே சமயம் , குழந்தைப் பருவத்தின் ஆரம்பகால வளர்ச்சியைப் பாதுகாக்க யுனிசெஃப் மலேசியாவுடன் இணைந்து சிலாங்கூர் பராமரிப்பு பொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
மேலும், கஸானா ஆராய்ச்சி நிறுவனத்தின் (கே.ஆர்.ஐ.) ஈடுபாடு, குறிப்பாக வீட்டில் அல்லது பராமரிப்பு மையங்களில் பெண்கள் மேற்கொள்ளும் பராமரிப்புப் பணிகளின் மதிப்பை மதிப்பிட்டு அங்கீகரிக்கும் என்று அமிருடின் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையின் வழி மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க இயலும் என்று அவர் கூறினார்.
கூடுதலாக, வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு பணியாளர் திறன்கள் மேம்படுத்தப்படும். மேலும் ஜப்பான் மற்றும் கொரியா போன்ற வளர்ந்த நாடுகளின் பராமரிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
அனைவருக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் வளமான எதிர்காலத்திற்காக மக்களின் நலனை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு ஏற்ப 2030 வரை பராமரிப்புத் துறைக்கான விரிவான கொள்கையை உருவாக்கிய மலேசியாவின் முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
பராமரிப்பு பொருளாதாரத்தை வலுப்படுத்தும் தளமாக எஸ்.ஐ.சி.எஸ். 2025 மாநாடு விளங்கும்
27 ஆகஸ்ட் 2025, 1:56 AM