மெர்சிங், ஆக. 26 - சாலையைக் கடந்த யானையை கார் மோதியதில் அதன் ஓட்டுநரான பெண்மணி காயமடைந்தார். இச்சம்பவம், மெர்சிங்-எண்டாவ் சாலையின் 12வது கிலோமீட்டரில் நேற்றிரவு நிகழ்ந்தது.
47 வயதான உள்ளூர் பெண்மணி இரவு 10.40 மணியளவில் மெர்சிங்கிலிருந்து எண்டாவ் நோக்கி டோயோட்டா வியோஸ் காயில் பயணித்துக் கொண்டிருந்த போது யானை மோதியதாக மெர்சிங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் ரசாக் அப்துல்லா சானி தெரிவித்தார்.
அம்மாது பிரேக்கை அழுத்தி காரை நிறுத்த முயன்றார். ஆனால் மிக அருகில் இருந்ததால் யானை மீது கார் மோதியது. காயமடைந்த அம்மாது மெர்சிங் மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றார் என்று இன்று பெர்னாமா தொடர்பு கொண்ட போது கூறினார்.
இந்த விபத்தின் விளைவாக பாதிக்கப்பட்டவரின் காரின் முன்பக்கம் பலத்த சேதம் ஏற்பட்டது.
இதற்கிடையே, விபத்தில் சிக்கிய யானை இறக்கவில்லை என்றும் சம்பவத்திற்குப் பிறகு அது மீண்டும் காட்டுப் பகுதிக்குள் நுழைந்ததாகவும் ஜோகூர் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா பாதுகாப்புத் துறை (பெர்ஹிலித்தான்) கூறியது.